தஞ்சாவூர், மே 4 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு, சின்னையா தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள், பேருந்துகள், வாக னங்கள் செல்ல இடையூறாக இருந்ததாக, மாவட்ட நிர்வா கம், பட்டுக்கோட்டை நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத் திற்கு புகார் மனுக்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும் என கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி விளம்பரம் செய்யப்பட் டது. இந்நிலையில், புதன்கிழமை காலை 10 மணி முதல், பட்டுக்கோட்டை நகரில் வருவாய்த்துறையினர், நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட் டோர் 2 பொக்லைன் இயந்திரங்களுடன், காவல்துறை பாது காப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதேநேரத்தில் கூடுதல் கால அவகாசம் அளிக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற் றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைக்காரர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.