districts

img

மதுக்கடையை மூட வலியுறுத்தி ஒரத்தநாட்டில் சிபிஎம் போராட்டம் !

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நகர கடை வீதியில், பொது மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இயங்கி வரும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியம் சார்பில், பூட்டு போடும் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகமான முறையில் நடந்து கொண்ட நிகழ்வு பதட்டமான சூழலை ஏற்படுத்தியது. 

ஒரத்தநாடு நகரத்தில், அரசு மகளிர் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை உள்ளன. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலரும், பல்வேறு காரியங்களுக்காக வந்து செல்கின்றனர். 

ஒரத்தநாடு கடைவீதியில், மன்னார்குடி பிரிவு சாலை அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையால், பொது மக்களுக்கும், பெண்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக இருப்பதால், கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று சிபிஎம் சார்பில், மத்திய குழு உறுப்பினர்  உ.வாசுகி தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது. 

இந்நிலையில் முதல் நாள் மார்ச் 27ஆம் தேதி, ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒரு மாத காலத்திற்குள் டாஸ்மாக் கடையை மூடுவதாக ஏற்றுக்கொண்டு, வட்டாட்சியர் எழுத்து மூலமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார்.  30.04.23 க்குள் கடை அகற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. 

ஆனால், தற்போது மூன்று மாதங்களை கடந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் கையெழுத்திட்டு   ஒப்புக்கொண்டபடி, இதுவரை டாஸ்மாக் கடையை மூடாமல் இருப்பதைக் கண்டித்தும், கடையை மூட வலியுறுத்தியும், ஜூலை.18, செவ்வாய்க்கிழமை காலை பூட்டுப் போடும் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. 

போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீலமேகம், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர், விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் மோகன்தாஸ், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பெர்னாட்ஷா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், மலர்கொடி, ரமேஷ், அரங்கசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். காவல்துறை முற்றுகையை தாண்டி மதுக்கடை நோக்கி முன்னேறினர். 

இதையடுத்து அங்கு வந்த ஒரத்தநாடு வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் மேலாளர் உதவி மேலாளர் ஆகியோர் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் கேசவன் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதால் கடையை காலி செய்ய தாமதமாகிறது. உடனடியாக கடையை காலி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஏற்கனவே ஏற்றுக் கொண்ட அடிப்படையில் ஒரு மாத காலத்தில் கடையை மாற்றாமல் இடத்தின் உரிமையாளர் நீதிமன்றத்திற்கு போய் தடையாணை பெறும் வரை நிர்வாகம் அவகாசம் கொடுத்ததை தோழர் வாசுகி  விமர்சித்தார். 

மேலும், வட்டாட்சியர் கையெழுத்துக்கே மதிப்பு இல்லை என்றால், இப்போது வாய்மொழியாக சொல்லுவதை எப்படி நம்புவது என கேள்வி எழுப்பினார். நீதிமன்ற தீர்ப்பில் இந்த கடைக்கு மதுபான லைசென்ஸ் நவம்பர் 28 வரை வழங்கப்பட்டிருப்பதால் அதுவரை கடையை மாற்றக்கூடாது என உள்ளது. 

டாஸ்மாக் நிர்வாகம் இப்படி வழக்கு தொடுத்து தடையாணை பெற்றிருந்தால் அது வேறு விஷயம். இடத்தின் உரிமையாளருக்கும் கடைக்கு வழங்கப்பட்டிருக்கிற உரிமத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்த கடை அடுத்த தெருவில் இருந்தாலும் இரண்டு தெரு தள்ளியிருந்தாலும் இந்த லைசென்ஸ் தொடரும்.  

இடத்தின் உரிமையாளர் அதிகபட்சம் போட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக முன்கூட்டி கடையை காலி செய்தால், எனக்கான வாடகை என்னாவது என்கிற கேள்வியை தான் எழுப்ப முடியுமே தவிர,  இன்ன லைசன்ஸ் கடைக்கு கொடுத்திருக்கிறது, எனவே இந்த இடத்தில் தான் அந்த கடை நீடிக்க வேண்டும் என்று கேட்டிருப்பது முற்றிலும் பொருத்தமற்றது. ஏதோ தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு முன்னால் கேசவன் கொடுத்திருக்கக் கூடும் என்கிற ஐயப்பாட்டையும் எழுப்பினார்.

டாஸ்மாக் அலுவலர்களுடன், நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கையில் ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரசன்னா தலைமையிலான காவல்துறையினர், திடீரென அங்கிருந்த மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகளை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ய முற்பட்டனர். போராட்டம் அமைதியான முறையில் நடந்து கொண்டும்,  அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும் இருந்த போது, காவல்துறையினர் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். காவல் துறையின் அத்துமீறலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் அத்துமீறி பிரச்சனையை உருவாக்கும் வகையில் நடந்து கொண்ட காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வாக்குறுதி கொடுத்த அடிப்படையில் குறுகிய கால அவகாசத்தில் டாஸ்மாக் கடை அகற்றப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

;