சேலம், டிச.23 - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உரிய பாது காப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவின் மூன்றாவது அலகில் 50 அடி உயரமுள்ள நிலக்கரி சேமிப்புத் தொட்டியின் கீழ் பகுதியில் தொழிலாளர்கள் 7 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
திடீரென அந்தத் தொட்டி கீழே சரிந்து விழுந்தது. இவ்விபத்தில் 2 தொழிலா ளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மேலும், 5 பேர் படுகாயங் களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த இரண்டு ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். சிகிச்சை பெற்று வருகிற 5 தொழிலாளர் களுக்கும் சிகிச்சைக்கான செலவு மற்றும் இழப்பீடுகள் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த தொழிலாளர் பணி நிர்வாகத்தின் மூலம் பணி வழங்க வேண்டும் என அனல் மின் நிலைய நிர்வாகத்திடம் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மின்சார வாரியம் தலா ரூ.10 லட்சம், ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் சார்பில் தலா ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 லட்சத்தை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வெள்ளி யன்று வழங்கினார்.
இந்நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந் திரன், விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டும், மேட்டூர் அனல் மின் நிலைய தலைமை பொறி யாளர், மின்வாரிய இயக்குநர் (உற்பத்தி) ஆகியோரை நேரில் சந்தித்தும் விபத்து குறித்து விவ ரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, இனி இதுபோன்று விபத்து ஏற்படாமல் இருக்க, உரிய பாதுகாப்பு வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலை வர் வீ.இளங்கோ, மேட்டூர் அனல் மின் நிலைய கிளைத் தலைவர் கே. சண்முகம், செயலாளர் எஸ்.செந்தில் வேலன், நிர்வாகி கே.எஸ்.பிரபு பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.