புதுச்சேரி,டிச.1- புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் அத்தியாவசிய பண்டங்கள் இல்லாததால் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் கட்டுமான வாரியத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிட மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், நடைபாதை வியாபாரிகள்,கடை ஊழியர்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமைப்பு சாரா நல சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் மூலமும் பண்டிகை கால பரிசு கூப்பன் புதுச்சேரி அரசின் பரிந்துரை படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1ஆயிரம் பெருமான பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு கூப்பன் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு பல்பொருள் அங்காடியின் அமுத சுரபியின் பிரதான கிளைகளில் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை மூன்று மாதத்திற்குள் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுக்கூப்பனை பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க அமுதசுரபி கூட்டுறவு அங்காடிக்கு சென்றால் அங்கு பிள்ளைகளுக்கு கொடுக்க கூடிய பிஸ்கட் வகைகள், துணி சோப்பு போன்ற பொருட்களே அதிகமாக உள்ளன. அத்தியாவசிய பண்டங்கள் பருப்பு வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் இல்லாததால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச செயலாளர் கலியனிடம் தொழிலாளர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, புதுச்சேரி கூட்டுறவு நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சிஐடியு இந்த பரிசு கூப்பன் வழங்கு வதற்கு ஒப்புதல் அளித்தது.மேலும் வாரியத்தில் இருந்து அமுதசுரபிக்கு முன் தொகையாக ரூ.12 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் போதிய அத்தியாவசிய பண்டங்கள் கொள்முதல் செய்யாமல் ஏற்கனவே இருப்பில் உள்ள பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்கி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. இத்தகைய நடவடிக்கையால் அவரவர் வங்கி கணக்கிற்கு பணத்தை நேரடியாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.எனவே உடனடி யாக தொழிலாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்றார்.