districts

இருளர் பெண்களுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உறுதி

செங்கல்பட்டு, ஜுலை 06-

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இருளர் இன பெண்களுக்கு உரிய பாது காப்பும், நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி ஜனநாயக மாதர்சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் தையூர் பாலம்மாள் நகர் பகுதியை சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பல  மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த 20க்கும்  மேற்பட்ட நபர்களை மரம் வெட்டும் பணியில் கொத் தடிமையாக ஈடுபடுத்தினார். அவர்கள் அனைவரும்  பாலுவுக்கு சொந்தமான ஒரு  காட்டு குடோன் ஒன்றில் தங்க வைக்கப் பட்டிருந்தபோது  இருளர் இன பெண்களை பாலு மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடு பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

   இச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று வரை பாலு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் க.புரு சோத்தமன், ஜி.ஜெயந்தி உள்ளிட்டோர் புதனன்று (ஜுலை 6) பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்தை சந்தித்து குற்றவாளி பாலு மற்றும் அவரது  அடியாட்களை கைது செய்திட வேண்டும்  என வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட  பெண்களுக்கும் அவரது குடும்பத்தாருக் கும்    காவல்துறை மூலம்  பாதுகாப்பு வழங்க  வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

   வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டவுடன் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும், இருளர் குடும்பங்களுக்கு ஆதார், குடும்ப அட்டை  உள்ளிட்ட அரசு  ஆவணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உறுதி அளித்துள்ளார்.