புதுச்சேரி, ஜூலை 17-
பனித்திட்டு உண்டு உறங்கும் பள்ளியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி பாகூர் கொம்யூன் குழு கூட்டம் தலைவர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். கொம்யூன் செயலாளர் கந்தன், மற்றும் நிர்வாகிகள் முருகையன், முனி யன், கலியன், சரவணன், செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பாகூர் பனித்திட்டு பகுதியில் ஆதி திராவிட மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட உண்டு உறங்கும் பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர் மாணவியர் விடுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படாத நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் முட்டை மற்றும் அசைவ உணவுகளை வழங்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை வேண்டும்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் ஆதிதிராவிட மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் பணிகள் பாதியில் கிடப்பில் உள்ளது உடனடியாக கட்டி முடிக்க வேண்டும்.
பாகூர், குருவிநத்தம் பகுதி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தலித் மக்களை அனுமதிக்க புதுச்சேரி அரசு தலையீடு செய்து வழிபாடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.