districts

img

போர் நினைவுச் சின்னத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி

சென்னை, டிச. 12- 1971 போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்களை யொட்டி சென்னை போர் நினைவுச் சின்னம் டிசம்பர் 16 முதல் 19 வரை பொதுமக்களுக்கு திறக்கப்பட உள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ‘வெற்றிப் போர் நினைவுச் சின்னம்’ 1971ஆம் ஆண்டு இந்தியப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் போர் நினைவிடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தலாம். 1971 இந்திய பாகிஸ்தான் போரில் சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்து வங்காளதேசத்தின் விடுதலைக்கு காரணமான இந்திய ஆயுதப் படைகளின் வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 16 அன்று முடிவடையும் வரலாற்று வெற்றியின் பொன்விழா ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 16ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ‘வெற்றிப் போர் நினைவிடத்தில்’ நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைமையகமான தட்சிண் பாரத் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

;