சென்னை, செப்.26- ராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையின் எலக்ட்ரம் கிளப்புடன் இணைந்து அபிக்யான் 2023 என்ற பெயரில் 12 ஆவது தேசிய தொழில்நுட்ப விழாவினை நடத்தியது. இவ்விழா “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்” என்ற மையக் கருத்தினை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காட்சியும் நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் ஷெர்லி எட்வார்ட் வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்த்திக் முன்னுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜோஹோ கார்ப்பரேசன் துணை மேலாளர் த.ச.ஆனந்த் நெற்குணம், செயற்கை நுண்ணறிவு துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்கள், தொழில் வாய்ப்புகள் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சி மனித இனத்தின் அன்றாட வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விளக்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.வி.ஜெயக்குமார், துணை முதல்வர் முனைவர் சி கோமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.