districts

img

தொழில் அடிப்படையில் சாதி..? காட்டுநாயக்கன் மக்கள் வேதனை!

ராணிப்பேட்டை, செப். 8 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம், ஆணைமல்லூர் ஊராட்சியில் காட்டு நாயக்கன் பழங்குடி இனத்தைச் சார்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காக இப்பகுதி ஆண்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கேஸ் ஸ்டவ் ரிப்பேர், ஈயம், பித்தளை (கலாய்) பூசுவது, பெண்கள் வளையல், இரும்பு சாமான்கள் விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆற்காடு வட்டம், காவனூர் பகுதியில் தங்க வீடின்றி அரசு பள்ளி அருகில் மரத்தடியில் வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வருவாய் துறை மற்றும் ஆனைமல்லூர் அப்போதைய தலைவர் ராஜ சிம்மா ரெட்டி உதவியுடன் அப்பகுதியில் குடியிருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மக்கள் ஊருக்குள் வந்து செல்வதற்கு இருந்த அச்சத்தை போக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நின்றது. ஆனைமல்லூர் ஊராட்சியில் காட்டுநாயக்கன் எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மக்களை பகுதியில் அவர்களை வெளியேற்ற ஊராட்சி மன்ற தற்போதைய தலைவர் எ.வி. சரவணன் அடாவடியாக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டியுள்ளார். தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் 2020-21 ஆண்டில் ரூ. 5 லட்சம் 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பட்டியிலின,பழங்குடி மக்களின் சமுதாய சுகாதார வளாகம் தற்போது வரை மக்கள் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு பல மாதங்கள் போராடி வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் வசதி இன்றி உள்ளது. மழைக்காலங்களில் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் தொந்தரவு அதிகம் உள்ளது. மேலும் அப்பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீராக அமைக்கப்படவில்லை இவைகளை பார்த்தால் எஸ்.டி இனத்தைச் சார்ந்த காட்டுநாயக்கன் மக்கள் வஞ்சிக்க படுகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது. தலைமை ஆசிரியருக்கு உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தால் மாணவர்களிடம் காட்டுநாயக்கன் சாதி சான்று கேட்டு கண்டிப்பு காட்ட, பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை இடை நிறுத்துகின்றனர். வருவாய் துறை அதிகாரிகள் தொழில் அடிப்படையில் சாதி தீர்மானிக்க அலட்சியம் காட்டுவது பெற்றோர்கள் மனம் வெறுத்து பிள்ளைகளின் கல்வியை பாதியில் துண்டிப்பது வேதனை அளிக்கிறது. அப்பகுதியில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஒருவருக்கு கூட சாதி சான்றிதழ் இல்லை. ஆசிரியர்களும், வருவாய் துறை அதிகாரிகள் பெற்றோர் செய்யும் தொழில் அடிப்படையில் சாதி தீர்மானித்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அரசாங்கத்தில் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். மாநில அரசின் செயல்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் வருவாய் துறை செயல்படுவதாக தெரிகிறது. ஆனைமல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் எ.வி. சரவணனின் செயல்பாடும் அணுகுமுறை குறித்து  காட்டுநாயக்கன் மக்கள் வேதனை தெரிவித்தனர். - எச்.கார்த்திக்