districts

ராமர் கோவில், காசிக் கோவில் தேர்தலுக்காகவே! கி.வீரமணி விளாசல்

சென்னை, டிச.16- ஆட்சிச் சாதனையைச் சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத நிலையில், சனாதனமும் - மதத்தையே நம்பி பாஜக வியூகம் அமைப்பதாகவும் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தேர்தலுக்காக மதத்தை பயன்படுத்துவதாகவும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பகிரங்கமாக - பதவி ஏற்பு விழாவின்போது பிரமாணம் - முறைப்படி - எடுத்ததோடு-  மேடையிலிருந்து இறங்கிய பிரதமர் மோடி கூடுதலாக ஓர் அரசமைப்புச் சட்ட  உருவகத்தின்மீது மண்டியிட்டு வணங்கி திரும்பி வந்து மேடையில் அமர்ந்தார். அதுபோலவே பகிரங்கமாக, மதச்சார்பற்ற அரசு என்ற முகப்புரையின் தத்துவத்தை காலில் போட்டு மிதிப்பதுபோல, இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, வாரணாசி காசி விசுவநாதர் கோவில் புனருத்தாரனம் அனைத்துக்கும் பல  கோடி ரூபாய்  மக்கள் வரிப்பணம் என்று நீள் பாதை, இத்தியாதி,

இத்தியாதி! பகிரங்க மாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தத்துவப் பக்கங்களைக் காவி ஆட்சியின் கறையான்கள் வெளிப்படையாக அரித்து வருகின்றன! சனாதன தர்மம் நிலைக்க இந்த  ஏற்பாடு என்று பிரதமர் புகழுரை மூலம் கூறுகிறார்! பா.ஜ.க. கட்சித் தலைவர் நட்டா என்பவர்,  பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர் களையெல்லாம் வாரணாசிக்கு வரவழைத்து, காசி விசுவநாதர் கோவில் தொடங்கி, அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோவிலுக்குச் சென்றும் வணங்கி, பக்திப் போர்வையில் செய்யப்படுவனவெல்லாம் 2022 இல் வரவிருக்கும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் `ஹிந்துத்துவாவை மய்யப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற இது ஒரு மறைமுக  வியூகம் என்று அரசியல் நோக்கர்கள் கூறு கிறார்கள்! ராமஜென்ம பூமியில் கோவில் கட்டப்படுவதுதான் சனாதன தர்மத்தின் புத்தெழுச்சி என்று கூறுவோர் பழைய சனாதனத்தைக் கடைப்பிடிக்கிறார்களா?  நவீன விஞ்ஞானத்தின்மூலம்தானே இவற்றை  உருவாக்குகிறார்கள்; அதுவே இவர்கள் சனாதனம் தோற்றுவிட்டது; மாறிவிட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் அல்லவா?

ஓநாய் சைவமாகிவிட்டதா?

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆட்சியின் சாதனைகளைக் காட்டி, வாக்குகள் பெற இயலாது என்று தெரிந்தே, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார்கள் - அதை நம்பி, ‘‘ஓநாய் சைவமாகிவிட்டது; பா.ஜ.க. மாறிவிட்டது’’ என்று நினைத்தால், அதைவிட பெருத்த தப்புக் கணக்கு வேறு இருக்கவே முடியாது! உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் இவற்றில் ஜாதி அரசியலை முன்பு நடத்தி,  பிரித்தாண்டு சென்ற தேர்தலில் பா.ஜ.க. வியூகம் வகுத்து வெற்றி பெற்றது. இப்போது அந்த ‘பாச்சா’ பலிக்காது என்பதைப்  புரிந்துகொண்டதால், இராமன் - பக்தி -  கோவில்மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே இந்த உத்திகள்!  தேர்தல் விதி களில் இடம்பெற்றுள்ள, தேர்தலுக்கு மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்ட விதிகள், காற்றில் பறந்துவிட்டனவோ! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

 

;