சென்னை, டிச. 16- நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் வியாழக்கிழமை (டிச. 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும்,
இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னும், மீண்டும் ஆக்கிரமிப்பு நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க ஆலோசனைகளை வழங்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில், மாவட்ட அளவிலான குழு அமைக்க வேண்டும் என்ற ஆலொசனையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், இணையதளத்தில் சர்வே எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே நீர் நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது என்பதால், நீர் நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் கருத்துக்களை கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.