districts

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் தானம்!

சென்னை,ஜன.20- சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக 15 ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் தானமாக பெற்றுள்ளனர். 46-வது புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு சிறைத் துறை சார்பில் தனி அரங்கு (நுழைவாயில் 5, எண் 286) அமைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக ‘சிறை வாசிகளுக்காக புத்தக தானம் செய்வீர்’ என வலியுறுத்தி ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை தானமாக கொடுக்க விரும்புவோர் 99412 65748 என்ற எண்ணில் அழைத்தால் வீடு தேடிச் சென்று சிறைத் துறையினர் பெற்று வருகின்றனர். மேலும், பலரும் அரங்குக்கே நேரில் சென்று புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். அதன்படி இதுவரை சிறை கைதிகளுக்காக 15 ஆயிரம் புத்தங்கள் தானமாக பெறப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறைத் துறையினரின் புத்தக அரங்கை நேரடியாக பார்வையிட்டு 100 புத்தங்களை தானமாக வழங்கினார்.