districts

சென்னை முக்கிய செய்திகள்

2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக்.28- சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அஸ்தினாபுரம் அருகே உள்ள என்.எஸ்.என் மற்றும் ரோசரி ஆகிய பள்ளிகளுக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகளுக்கு விரைந்து பெற்றோர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மாணவர்கள் அனைவரும் வெளியே அனுப்பிய நிலையில், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பள்ளியை ஆய்வு செய்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நவம்பர் 4ல் இறைச்சிக் கடைகள் மூடல்!

சென்னை, அக்.28-  மகாவீர் நினைவு  தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள், வருகிற நவம்பர் 4ம்  தேதி (திங்கட்கிழமை) மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஜெயின் கோயில்களி லிருந்து 100 மீட்டர் சுற்ற ளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடை களும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளால் தமிழ் மொழிக்கான நேர்முகத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்?

சென்னை, அக்.28- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான வித்யாசாகர் என்பவர் தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை வரும் நவம்பருக்குள் சமர்ப்பிக்காவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என ஏற்கெனவே அவருக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.   இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வித்யாசாகர், ஆங்கில வழியில் பட்டப்படிப்பை முடித்த நிலையில் தமிழ் மொழிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றதாகவும், ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதால், தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தன்னை நிர்பந்திக்கக்கூடாது என்றும், இதற்காக தனது ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை திங்களன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கல்வி, வேலை வாய்ப்பு முதல் பொது சேவைகள், சுகாதாரம் வரை மாற்றுத் திறனாளிகளால் முழு பங்களிப்பையும் வழங்க முடியவில்லை. அவர்கள் சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் ரீதியாக எதிர்கொள்ளும் தடைகளை புரிந்து கொண்டு, அவற்றை அகற்ற வேண்டும். சாதாரண நபர்களுக்கு விதிக்கும் நிபந்தனைகளை, மாற்றுத் திறனாளிகளுக்கும் விதித்து தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாய் பேச முடியாத மனுதாரரால் எப்படி தமிழ் மொழி தேர்வுக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்? எனவே, தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து மனுதாரருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விலக்கு அளிக்க வேண்டும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளையும் தமிழக அரசு அவருக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி: 32 விரைவு ரயில்களில்  தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க முடிவு

சென்னை, அக்.28- தீபாவளி பண்டிகை அக்.31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென், மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. காத்திருபோர் பட்டியல் அதிகமுள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர், காரைக்கால், ஏற்காடு உள்பட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - கோவை இடையே அக்.30, நவ.3 ஆம் தேதி இரு மார்க்கமாக இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலில் ஒரு சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - நாகர்கோவிலுக்கு நவ.1-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும், மறுமார்க்கமாக, நவ.3-ம் தேதி நாகர்கோவில் - சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - தூத்துக்குடிக்கு அக்.30, நவ.1, 3, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, தூத்துக்குடி - சென்னை எழும்பூருக்கு அக்.29, 31, நவ.2, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு அக்.30, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும், மறு மார்கமாக, காரைக்கால் - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் நவ.2, 3 ஆகிய தேதிகளில் ஒருபெட்டியும் சேர்த்து இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - தஞ்சாவூருக்கு அக்.29, 30, நவ.1, 2, ஆகிய தேதிகளில் இயக்கப்படும் உழவன் விரைவு ரயிலில் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, தஞ்சாவூர் - சென்னை எழும்பூருக்கு அக்.30, 31, நவ.2, 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை

திருவண்ணாமலை, அக்.28- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வட்டார செயலாளர்  குபேந்திரன் என்பவர் தென்முடியனூர் கிராமத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.  அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:- தென்முடியனூர் கிராமத்தில்  இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்கள் இக்கோயிலில் சென்று வழிபட முடியாத நிலைமை இருந்தது.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியால் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் பட்டியலின மக்கள் ஆலய வழிபாடு செய்து செய்தனர். அது முதல் தென்முடியனூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த கோவில் திருவிழா நடக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தபோது, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் காட்டி இதுவரையில்,பாரம்பரியமாக நடந்து வந்த திருவிழா நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த  ஆண்டு ஆதிக்க சமூகத்தினர் தாங்கள் தனியாக உருவாக்கிய கோவிலில் கூழ் ஊற்றி திருவிழா நடத்தினர். மேலும், வரும் 30.10.24 அன்று ஆதிக்க சமூகத்தினர் வெளியூரிலிருந்து மாடுகளை வரவழைத்து  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மஞ்சுவிரட்டு நடத்த உள்ளனர்.  கோயில் திருவிழா நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சொல்லும் மாவட்ட நிர்வாகம்,  குறிப்பிட்ட சமூகத்தினர் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிப்பது, பாரபட்சமான நடவடிக்கையாகும். எனவே மஞ்சுவிரட்டு நிகழ்வையும் தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வின் போது, சிபிஎம் தண்டராம்பட்டு வட்டார செயலாளர் சக்திவேல்,  மற்றும் நிர்வாகிகள் ஆர்.ரவி உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.