districts

சாலையோர பெண் வியாபாரி கிருஷ்ணவேணி மரணத்திற்கு காரணமான அதிகாரியை கைதுசெய்க! சிஐடியு மத்திய சென்னை மாவட்டக்குழு வலியுறுத்தல்

சென்னை,ஜூன் 15- சாலையோர பெண் வியாபாரி மர ணத்திற்கு காரணமான அதிகாரியை கைது செய்யவேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ம.தயாளன் செயலாளர் சி.திருவேட்டை ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார் பகுதியில் கடந்த 13 ஆம்தேதி காலை 11 மணிக்குபழம் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளின் பழக்கூடையை பறித்து மாநகராட்சியின் குப்பை வண்டியில் ஏற்றியுள்ளனர். 

மாநகராட்சி ஊழியர்களுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட 59 வது மண்டல உதவி செயற்பொறியாளர் கார்த்திக் நேரடி யாக களமிறங்கி வியாபாரிகளின் பொருட்களை பறித்துள்ளார். குடோன் தெரு முனையில் பழம் விற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியம்மாளின் பழக்கூடையை கார்த்திக் பிடுங்க, கிருஷ்ண வேணியம்மாள் பழங்களை எடுத்துக் கொண்டு ஓட கீழே விழுந்து இறந்துள்ளார்.  அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கொதித்துப்போன பொது மக்களும், வியாபாரிகளும் கார்த்திக்கை தாக்க முனைந்துள்ளனர். சம்பவ இடத்தில் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக வந்த காவல்துறையினர் கார்த்திக்கை பாதுகாப்பாக பூக்கடை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மறியல் செய்தவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் வழக்கம்போல் காவலர்களை குவித்து வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். பின்னர் உண்மைக்கு புறம்பான கதையைக்கட்டி கிருஷ்ணவேணியம்மாளுக்கு உடல் நலமில்லை, புத்தி சுவாதீனமற்றவர் எனவே, கடைகளை அப்புறப்படுத்தியதற்கும் இந்த சாவுக்கும் சம்மந்தமில்லை என காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு தவறான செய்தியளித்துள்ளனர். 

இது முதல் சம்பவமல்ல சென்ற வருடம் அக்டோபர் மாதம் இதே கார்த்திக் ஒரு பெண்வியாபாரியின் பழக்கூடையை பறித்த போது அவர் ஓட முயற்சித்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதற்கு பிறகாவது கவனமாக இருந்தாரா என்றால் இல்லை என்பதைத்தான் கிருஷ்ணவேணி மரணம் காட்டுகிறது. எனவே, இச் சம்பவம் தற்செயல் அல்ல. இது படுகொலைக்கு ஒப்பானது.

இறந்து போன கிருஷ்ணவேணியம்மாள் 50 வருடங்களுக்கு மேலாக குடோன் தெரு முன்பு சாலையோரத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். அவரது குடும்பமே சாலையோர வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறது. பல நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்து வாழ்கின்றனர். இவர்களில் பெரும் பகுதி பெண்கள், இதிலும் கணவனை இழந்த பெண்கள் அதிகம் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்கள் இவர்கள்

காவல்துறைக்கும் மாநகராட்சி அதிகாரி களுக்கும் வஞ்சம் கொடுத்தும் குற்றவாளி களைப்போல் மறைந்து வியாபாரம் செய்து பிழைக்கின்ற கொடுமை இங்கு உள்ளது. இந்த சூழலில் தான் நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது என்று சொல்லி வியாபாரிகளை விரட்டியடித்து ஒரு உயிரைப் பறித்த கொடுமை நிகழ்ந்துள்ளது. சென்னை நகரத்தின் வளர்ச்சிக்கு உழைத்திட்ட ஏழை எளிய மக்க ளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இக் கொடு மையை உடனே நிறுத்த வேண்டும். இறப்புக்கு காரணமான கார்த்திக்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ண வேணியம்மாள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். வியாபாரிகள் அகற்றப் படுவதை நிறுத்தி அந்த இடத்திலேயே வியா பாரம் செய்ய தகுந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரட்டன் பஜார் பகுதி 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர வியாபாரம் நடக்கும் பகுதி. சுதந்திர போராட்டத்தில் தந்தை பெரியார் கைத்தறை துணியை சுமந்து விற்பனை செய்து தடியடிபட்டு சிறைசென்ற இடம். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2014 படி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் நடைபெறும் இடங்களை இயற்கை சந்தையாக கருதி அங்கு சாலையோர வியாபாரம் செய்வதை தடை செய்யக் கூடாது என்கிறது. 

பொது நலன் கருதி ஒரு இடத்தில் விற்பனை செய்ய கூடாது என்று தடை விதிக்க வேண்டுமென்றால் சட்டப்படி அமைக்கப்பட்ட நகர விற்பணை குழு தான் முடிவு செய்ய வேண்டும். இதை கருத்தில் கொண்டு நீதி மன்றம் உத்திரவிட்டதற்கு பிறகு அவசர அவசரமாக நகர வெண்டிங் கமிட்டியை அமைத்தனர். இந்த இடத்தை காலி செய்வதற்கு வெண்டிங் கமிட்டியின் வியாபாரிகள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் நீதி மன்றத்தை காரணம் காட்டி மாநகராட்சி அதிகாரிகளே இதைச் செய்கின்றனர். 

வியாபாரிகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடமாக இதை மாற்றுகின்றனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் 9.6.2022 மாநகராட்சி 386 வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்வதாக மாநகராட்சி ஒரு கணக்கெடுப்பை தந்தது. நீதிமன்றம் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி காலி செய்ய உத்திரவிட்டது. ஆனால் மாநகராட்சி 159 வியாபாரிகளுக்கு மாற்று இடம் காண்பித்தது. அதுவும் மக்கள் வராத வியாபாரம் செய்ய லாயக்கற்ற இடம் என்பதால் வியாபாரிகள் அங்கும் போக முடியாமல் ஏற்கெனவே இருந்த இடத்திலும் இருக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

;