சீரமைக்கப்படாத அரசு பள்ளி விளையாட்டு மைதானம்
காஞ்சிபுரம், டிச.25- காஞ்சிபுரத்தில் உள்ள வாலாஜாபாத் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியைச் சுற்றிலும் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இங்கு மேல்நிலைப் பள்ளிகள், நூலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், ரயில் நிலையம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், வாலாஜாபாத் மட்டுமின்றி வாலாஜாபாத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகின்றனர். மேலும், இவர்களுக்காக பள்ளி வளாகத்திலேயே பிரதான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி வாலாஜாபாத் நகர் பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மைதானம் தற்போது பராமரிப்பின்றி செடிகள் முளைத்து புதர்களாக காட்சியளிக்கிறது. வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த இந்த விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரும்புக் குழாயால் தாக்கி வாலிபர் பலி: 2 பேர் கைது
சென்னை, டிச. 25- சென்னை பெரம்பூர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், இதுகுறித்து ஜெய்சங்கரின் தந்தையிடம் கூறியுள்ளார். தந்தை அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் அவரது நண்பருடன் சேர்ந்து கடந்த 21ஆம் தேதி சிறுவர் பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த மணிகண்டனை இரும்பு குழாயில் தாக்கியுள்ளார். இதனை மணிகண்டனின் தம்பி விக்னேஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, குளக்கரை சாலையைச் சேர்ந்த ஜெய்சங்கர்(எ) சங்கர் (26), பழைய வாழைமா நகரைச் சேர்ந்த ஐசக் ஜெயகுமார் (23) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் உதிரிபாகம்
சென்னை, டிச.25- காசிமேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் விசைப்படகில், டிரைவர் லோகநாதன் தலைமையில் 6 பேர், கடந்த 21ம் தேதி, மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர், இவர்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா நிஜாம் பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இவர்களது வலையில், அலுமினியத்தால் ஆன 5 அடி நீளம் ஒன்றரை அடி அகலத்தில், 100 கிலோ எடை கொண்ட ராக்கெட் உதிரி பாகம் சிக்கியது. அதனை மீட்ட மீனவர்கள், செவ்வாயன்று (டிச.25) காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதேபோல், கடந்த மாதமும் மீனவர் வலையில் ராக்கெட் உதிரி பாகம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சோதனையின் போது கடலில் விழுந்த உதிரிபாகங்கள் மீனவர்கள் வலையில் சிக்குகிறது. இதில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை,’’ என்றனர்.
சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, டிச.25- சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளியன்று (டிச.27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம், கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை. இதில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாவட்டஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குளத்தில் சிறுவன் சடலமாக மீட்பு
சென்னை, டிச.25- கேளம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி வேல். இவருக்கு சுபத்ரா என்ற மனைவியும், சாய் தர்ஷன் (8), இஷாந்த் (4), ஆகிய 2 மகன்க ளும் உள்ளனர். இவர்க ளில், மூத்த மகன் சாய் தர்ஷ னுக்கு வாய்பேச முடியாத நிலை இருந்துள்ளது. கடந்த 23ம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற சாய் தர்ஷன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி யடைந்த பெற்றோரும், உறவி னர்களும் பல இடங்களில் தேடினர். இந்நிலையில், செவ்வாயன்று காலை கோயில் குளத்தின் சிறுவன் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெற்றோரும், போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுவன் மரணம் குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வலியுறுத்தல்
கடலூர், டிச.25- கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பின் (பி.இ.எப்.ஐ) முதல் பேரவை கூட்டம் கடலூரில் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் எம்.ராஜகேசி பேரவையை துவக்கி வைத்தார். சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையை பொதுச்செயலாளர் பரிமேலழகர் முன்வைத்தார். பேரவையை வாழ்த்தி சம்மேளன நிர்வாகிகள் கோவிந்தராஜ், எட்வர்ட் ஜான் மற்றும் ஸ்டாலின் பேசினர். தீர்மானம் கேரள மாநிலத்தை போன்று, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிர் கடனுக்கு நபார்டு வங்கியின் மூலம் மறு நிதி பெற்று தர வேண்டும். ஊழியர் எண்ணிக்கை உயர்த்தி புதிய ஊழியர்களை விரைவில் பணி அமர்த்த வேண்டும்.வங்கியின் துணை விதிப்படி உதவி மேலாளர்களை சரக மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும் எழுத்தர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவையை நிறைவு செய்து கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் இ. சர்வேசன் உரையாற்றினார். நிர்வாகிகள் தலைவராக செந்தில்குமார், பொதுச்செயலாளராக பரிமேலழகர், பொருளாளராக தென்றல், ஆலோசகராக எம்.மருதவாணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புழல் சிறையில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
சென்னை, டிச. 25- புழல் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் கைதிகள் தொடர்பான ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை பிரிவு, பெண்கள் பிரிவு என 3 பிரிவுகளில் 4000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்த நிலையில் தண்டனை பிரிவில் பழைய காகிதங்களை அரைத்து அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதன்கிழமை திடீ ரென புகை வந்துள்ளது. பின்னர் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளன. தகவலின் அடிப்படை யில் அங்கு வந்த தீய ணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கைதிகள் தொடர்பான ஆவணங்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்வு புதுச்சேரி அரசுக்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு
புதுச்சேரி, டிச.25- அரசு பள்ளிகளில் 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு கட்டாய தேர்வு முறை அமல்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: குழந்தைகள் மீதான சுமையை குறைக்க வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு பேராசிரியர் யெஷ்பால் தலைமையில் குழு ஆய்வு கள் மற்றும் அறிக்கையின் அடிப்படை யில், சுமையில்லா கற்றல் முறையும், அதை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கல்வி உரிமைச் சட்டம் 2009 உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், இந்தியா உட்பட பல உலக நாடுகளின் ஆய்வுகள் மூலம் தோல்வி என்ன என்பதை உணர முடியாத ஒரு வயதில் குழந்தைகளுக்கு தேர்வு வைத்து தேர்ச்சி பெறாதவர்களை ஒரே வகுப்பில் தேக்கி வைத்து அவர்க ளுக்குள் தேர்வு என்றாலே ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதாகும். குறிப்பாக, தொடக்கப்பள்ளி காலத்தில் ஒரு சில குழந்தைக ளுக்கு எதவாது கற்றல் குறைபாடு இருக்கக்கூடும். இந்த குறைபாடு களை களையப்பட தொடர்ச்சி யான விரிவான மதிப்பீடு மூலமாக வும்,தொடர்ச்சியாக கற்றல் செயல்பாட்டில் ஈடுபட வைத்து அவர்களை முன்னேற்றம் காண வைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தேர்ச்சி அல்லது தோல்வி என்பதே தெரியாத வயதில் தேர்வு வைத்து தேர்ச்சி பெறாதவர்கள் ஒரே வகுப்பில் தேக்கி வைக்கும் போது தன்னுடன் படித்த மாண வர்கள் அடுத்த வகுப்பு செல்லும் போது அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிய கல்வி மீது வெறுப்பை உருவாக்கி இடைநிற்றல் மட்டுமே அதி கரிக்கக்கூடும். எனவே இவைகளை ஏற்படக் கூடாது என்பதற்காக கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை எந்த வகுப்பிலும் நிறுத்தி வைக்க கூடாது என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றி யெல்லாம் கவலைப் படாமல் ஒன்றிய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் 2009ல் திருத்தம் மேற்கொண்டு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து அதற்கான விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் முடிவை எவ்வித ஆலோசனையின்றி அப்படியே புதுச்சேரியில் அமல்படுத்துவது ஏற்புடையதல்ல. ஒரு சமூகம் முன்னேறி வரும் சூழ்நிலையில், சில நாடுகளில் நான்காவது தலைமுறை சீர்திருத்தங்களை கல்வி முறையில் அமல்படுத்த போகின்றன. ஆனால், இந்தியாவில் மீண்டும் பின்னோக்கி இழுத்து செல்லக்கூடிய ஒன்றிய அரசின் இச்செயலை புதுச்சேரி கல்வித்துறை திணிக்க நினைப்பது கொடிய செயலாகும். பள்ளிகள் இல்லாத இடத்தில் புதிய அரசு பள்ளிகளை உருவாக்கமால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்கும் குழந்தைகள் மீது சுமையை திணிக்க நினைப்பது இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மாநில உரிமை, மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தும் புதுச்சேரி முதல்வர், ஒன்றிய அரசின் திட்டமிட்ட ஆர்.எஸ். எஸ். அஜெண்டா புதுச்சேரியில் அமல்படுத்துவது தவிர்த்து, மாநில மக்களின் பண்பாடு கலாச்சாரத்தோடு கலந்த நடைமுறையில் உள்ள கல்வி, முறையான கட்டாய தேர்ச்சி முறையை தொடர்ந்து நீடிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை தொடரும் என்கிற அறிவிப்பு புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.