காஞ்சிபுரம், ஜூன் 1 - தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு உத்தரமேரூர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் மே 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் மற்றும் சிலம்பம் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை சேர்ந்த இளம் சிறார்கள் 10க்கும் மேற்பட்டோர் இந்த போட்டிகளில் பங் கேற்றனர். இவர்களில் உத்தரமேரூரை சேர்ந்த சிரனிகா சிலம்பத்தில் அர்சன், ரிதிஷ், அஜய் ஆகியோர் கிக்பாக்சிங் போட்டியில் தங்கம் வென்றனர். மாணவிகள் நிசாந்தினி, தரனிகா ஆகியோர் சிலம்பப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று உத்தர மேரூர் திரும்பிய வீரர்களுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.