districts

தமிழ் சாகித்திய அகாடமி ஏன் வேண்டும்? - உதயசங்கர்

1.    தமிழ் சாகித்திய அகாடமியை தமிழக அரசே நிர்வாகித்துக் கொள்ள முடியும்.தமிழக அரசே அதன் நிர்வாகிகளை நியமனம் செய்து கொள்ள முடியும்.
2.    தமிழில் ஆகச் சிறந்த இலக்கியவாதிகளையும் அனுபவமிக்க அறிவாளிகளையும் சாகித்திய அகாடமி  நிர்வாக பொறுப்புகளில் அமர்த்தி தமிழ் மக்களுக்குத் தேவையான கலை இலக்கிய நடவடிக்கைகளை திட்டமிட முடியும்.
3.    ஈராயிரம் ஆண்டு இலக்கிய செழுமை வாய்ந்த தமிழ் மொழியின் தொடர்ச்சியினை போற்றிப் பாதுகாக்கவும் அதன் எதிர்கால சந்ததியினரை உருவாக்கவும் தமிழ் சாகித்திய அகாடமி மூலம் நாம் திட்டமிட முடியும்.
4.    புதிய தலைமுறையினருக்கு இயல் இசை நாடகம் என்ற மூன்று துறைகளிலும் பயிற்சிகள் வழங்குவதற்கு தமிழ் சாகித்திய அகாடமியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
5.    இப்போது தமிழக அரசு மண்டல வாரியாக நடத்திக் கொண்டிருக்கிற இலக்கியத் திருவிழாக்களை தமிழ் சாகித்திய அகாடமி மூலம் திட்டமிட்டு மாவட்டம் தோறும் நடத்த முடியும்.
6.    தமிழ் சாகித்திய அகாடமியின் மூலம் எழுத்தாளர்களிடமிருந்து நூல்களை பெற்று மலிவு விலையில் மக்களிடம் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு செல்ல முடியும்.
7.    தமிழின் தொன்மை வளமை பெருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல தமிழ் சாகித்திய அகாடமி உதவி செய்ய முடியும்.
8.    மத்திய அரசின் பிடியிலிருந்து நம்முடைய தாய் மொழியை நாம் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
9.     மாநில மொழிகள் குறித்த மத்திய அரசின் அலட்சியத்தை நாம் புறம் தள்ளி நம் மொழியின் பெருமையை உலகம் எங்கும் பரவச் செய்ய தமிழ் சாகித்திய  அகாடமியின் மூலம் நாம் திட்டமிட முடியும்.
10.    அப்படி தமிழ் சாகித்ய அகாடமி அமையும் போது தமிழ் இலக்கியத்திற்கு சம்பந்தமில்லாதவர்களோ அல்லது மத்திய அரசின் அரசியல் சார்புடையவர்களோ பதவிகளில் அமர முடியாது. அவர்களுடைய விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப சாகித்ய அகாடமியின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியாது. விருதுகள் வழங்குவதில் பாரபட்சம் காட்ட முடியாது.
11.    தமிழ் சாகித்திய அகாடமி அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.நெல்லையில் நடந்த பொருநை இலக்கியத் திருவிழாவில் மலையாள எழுத்தாளர் கல்பற்ற நாராயணன் இந்த அரசு தமிழ்சாகித்திய அகாடமியை உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்