திருப்பூர், செப். 13 - திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் 3 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் முயற்சி யில் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைப்பதை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் சங்கத்தினர் கவனித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து கண் காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் திங்களன்று இரவு அங்கு சுமார் 40 மூட்டைகளில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்து உறுதி செய்தனர். உடனடி யாக அப்பகுதி மக்கள் துணையுடன் அந்த இடத்தை முற்றுகையிட்டு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்த தகவல் பரவிய நிலையில் பல்வேறு கட்சி யினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதுக்கி வைக்கப் பட்டிருந்த சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த அரிசி தரமானதாக இருந்தது. பொது மக்களுக்கு ரேசன் கடைகளில் பழுப்பு நிறத்தில் சமைப்பதற்கு லாயக்கற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் தரமான அரிசி இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. எனவே ரேசன் அரிசி கடத்தலில் தனிநபர் மட்டுமின்றி அந்த துறை சார்ந்தவர்கள் உடந்தையாக செயல் படாமல் இது சாத்தியமில்லை என்று கடத்தல் அரிசியைக் கைப்பற்றிய வாலிபர் சங்கத்தினர் கூறினர். அதிகாரிகள் கைப்பற்றிய ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, இதில் தொடர்புடைய குற்றவாளி களை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய் வதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.