சேலம், அக்.6- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளிக்க முயன்றபோது, மாநகராட்சி ஆணையரை சந்திக்க மறுத்ததைத் தொடர்ந்து ஆணையாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி தலைமையில், மாவட்ட நிர்வாகி திவ்யா உள்ளிட்ட பலர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக மாநகர ஆணையாளர் காக்க வைத்ததை தொடர்ந்து ஆணையாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர், மனுவின் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.