திருப்பூர், ஆக.27 - திருப்பூர் மாநகராட்சியில் ஆக.27 ஞாயிறன்று யூனியன் மில் சாலையில் மகிழ்ச்சியான ஞாயிறு என்ற தலைப்பில் மக்கள் கொண்டாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மாநகரின் ஒரு குடியிருப்பு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் மக்கள் பங்கேற்கும் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, திருப்பூர் யூனியன் மில் சாலையில் அதிகாலை முதல் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தை மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், கோவிந்தசாமி, 35ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் பங்கேற்று கொண்டாடினர். பாரம்பரிய உணவுத் திருவிழாவும், பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.