அவிநாசி, மே 14- அவிநாசி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால், 1800க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் பலத்த காற்றுடன், மழை வெளுத்து வாங்கி வருகிறது. இனி வரும் நாட்களிலும் கோடை மழை தொடரும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாரல் மழையுடன் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில், புலிப்பார், புஞ்சை தாமரைகுளம் ஊராட்சிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இதைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மற்றும் வரு வாய்த்துறையினர், பாதித்த பகுதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் புலிப்பார் ஊராட்சியில் 200 வாழை மரங்களும், புஞ்சை தாமரைகுளம் ஊராட்சியில் 1600 வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேலும், இந்த பலத்த காற்றால் சாலையோரம் இருந்த மரக்கிளைகளும் முறிந்து சேதமானது. இதனால் சேவூர் பகுதியில் இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை மின்தடை ஏற்பட்டது.