சேலம், செப்.29- காடையாம்பட்டி அருகே உள்ள பெத்தேல் காலனி பகுதி ஆதி திராவிட சமூக மக்கள் 40 ஆண்டு களாக பயன்படுத்தி வந்த சாலை யை சாதி ஆதிக்கவாதிகள் அடைத் துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு நடத்தி,இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், காடை யாம்பட்டி தாலுகா, டேனிஸ் பேட்டை கிராமத்தில் பெத்தல் காலனி என்ற பகுதியில் 1978 ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு தமிழக அரசால் 39 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. தற்போது அப்பகுதியில் 40 குடும் பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற் பட்ட ஆதிதிராவிட சமூக மக்கள் வசித்து வருகின்றனர். பெத்தேல் காலனியிலிருந்து டேனிஸ்பேட்டை பிரதான சாலைக்கு வந்து செல்ல அப்போதே அரசால் சுமார் 350 மீட்டர் நீளம் கொண்ட மண்பாதை யும் அளந்து கொடுக்கப்பட்டது. அந்த சாலையை தான் பெத்தேல் காலனி மக்கள் 40 ஆண்டு கால மாக பயன்படுத்தி வந்தனர். தற் போது அந்த சாலையில் காலனி யையொட்டி 70 மீட்டர் அளவிற்கு தங்களுடைய பட்டா நிலம் என்று கூறி ஆதிக்க சாதியினர் சாலையை வெட்டி பாதையை தடுத்து விட் டனர். அதேபோல் பெத்தேல் காலனிக்கு வடக்கில் உள்ள மண் மேட்டையொட்டி, அப்பகுதி பொது மக்களுக்கு மயானத்திற்கான நிலமும் அரசால் வழங்கப்பட்டு, அதற்காக காட்டப்பட்ட வழி தடத்தில் சென்றுதான் மயானத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது மயானத்தையும், மயானத்திற்கு செல்லும் பாதையையும் ஒரு சிலர் “தங்களிடம் யுடிஆர் பட்டா உள்ளது” என்று சொல்லி மறித்து விட்டனர். சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை சாதி ஆதிக்கவாதிகள் அடைத்துவிட்ட தால், அப்பகுதி மக்கள் மருத்துவ மனை உள்ளிட்ட அவசரத் தேவைக்கு கூட ஊரைவிட்டு நகருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட் டுள்ளது.
மேலும், மயானப் பாதை மறிக் கப்பட்டுள்ளதால் இறப்பு ஏற் பட்டால் அடக்கம் செய்யக்கூட வழி இல்லாமல் உறவினர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சில சமயங்களில் நிர்பந்தத்தின் காரணமாக ஏற்கனவே புதைக்கப் பட்ட சடலத்தை கூட தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத் துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சி யரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து பெத்தேல் காலனி மக்கள் சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தங்களுக்கு பாதை மற்றும் மயானத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று முறை யிட்டனர். அதனடிப்படையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மேட்டூர் வருவாய் அலுவலரிடம் இரண்டு முறை புகார் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓமலூர் கமிட்டி செய லாளர் என்.ஈஸ்வரன், கமிட்டி உறுப்பினர்கள் சேகர் (எ) குமார், செல்வகுமார், சின்ராஜ் ஆகி யோரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல், செயலாளர் வீ.இளங்கோ மற்றும் பெத்தேல் காலனி ஊர் பெரியவர்கள் மகேந் திரன், ஆறுமுகம், சுப்பிரமணி, கோபிராமன் ஆகயோருடன் பெத்தேல் காலனிக்கு சென்று நேரடி கள ஆய்வு நடத்தினர். இதன்பின், பெத்தல் காலனி மக்களுடைய கோரிக்கை நியாய மானது என்று கண்டறியப்பட்டு, காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், “பெத்தேல் காலனி மக்கள் பிரச்சனை குறித்து அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லை யென்றால் அடுத்த கட்ட நேரடி நடவடிக்கைக்கு செல்வோம்” என மனு அளிக்கப்பட்டது. அம் மனுவை பெற்று கொண்ட வட்டாட் சியர் உடனடி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.