districts

img

கோவை மதுக்கரை அருகே காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற விவகாரத்தில் மேலும் 7 பேர் கைது!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே காரை மறித்துக் கொள்ளையடிக்க முயன்ற விவகாரத்தில், தலைமறைவாக இருந்த  மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் கேரளாவில் வைத்து கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக்(27). விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் மடிக்கணினி உள்ளிட்ட கணினி சாதனங்களைக் கடந்த 13 ஆம் தேதி பெங்களூரில் வாங்கிக் கொண்டு அவரது நண்பர்களுடன் சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். 14ம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோவை மாவட்டம் மதுக்கரை அருகே பாலத்துறை  பிரிவு பகுதியில் வந்த போது அவரது காரை 3 கார்கள் பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளன. அதில் ஒரு கார் இவர்களது காரை மறைத்து நின்று அதிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் இவர்களது காரை கட்டைகளால் தாக்கி உள்ளனர். பின்னர் காரில் இருந்த பொருட்களைக் கொள்ளை அடிக்க முயன்ற நிலையில் ஓட்டுநர் காரை அங்கிருந்து ஓட்டி எடுத்து சென்றுள்ளார்.

இது குறித்து சித்திக் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மதுக்கரை போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ், ரமேஷ்பாபு, இராணுவ வீரர் விஷ்ணு மற்றும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய் குமார், மற்றொரு விஷ்ணு  என 5  பேரைக் கைது செய்தனர். மேலும்  அவர்களிடமிருந்து 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரைப் பிடிக்க 3 தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டு தேடி வந்தனர். இந்நிலையில் பாலக்காட்டில் பதுங்கி இருந்த ஜிஜேஷ், ஜினு, நந்தகுமார், ஹரீஸ்குமார், ஜிதின், ராஜீவ், அனீஸ் ஆகிய 7 பேரைத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களைக் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.