districts

கள்ளச்சாராயம், போதை பொருள் புழக்கத்தை ஒழித்திடுக : ஜூன் 25 கள்ளக்குறிச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவுகள் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அப்பாவி மக்களின் உயிரிழப்புகள், அவர்களது உறவினர்கள் கதறல் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இவர்களது குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் பல நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். இருப்பினும்,  இக்குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்ய  முடியாததாகும். இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை போதாது

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர், மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள் உட்பட சிலரின் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷ னும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் போது மானதல்ல என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். கள்ளச்சாராய விற்பனையை ஒழித்துக்கட்டுவதில் அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட வில்லை என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

அதிகார வர்க்கத் துணையுடன்... 

கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் கள்ளச்சாராயம் பல ஆண்டுகளாக விற்பனையாகி வருவது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்தது அல்ல. அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடனேயே கள்ளச்சாராய வியாபாரம் நடந்துள்ளது. எனவே, கள்ளச் சாராய சாவுகளுக்கு காவல்துறை மற்றும் இதர துறை அதி காரிகள் பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் சம்பந்தபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

அரசியல் பிரமுகர்களையும் கைது செய்க!

இதேபோன்று, அரசியல் செல்வாக்குள்ள கூட்டத்தின் பின்புலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை பகிரங்கமாக நடந்து வருகிறது. விற்பனையில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளதைப் போல இந்த சமூக விரோத செயலுக்கு பின்னால் உள்ள அதிகார வர்க்க அரசியல் பிரமுகர்களையும் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் - மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. மறுபுறம், கள்ளச்சாராயமும் விற்பனையாகி வருகிறது. இது மாநிலத்தின் மதுபான கொள்கைக்கே சவாலாக அமைந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறப்பு ஏற்படுகின்றபோது பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. மற்ற காலங்களில் கள்ளச்சாராயத்தை ஒழித்திட காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, மாறாக உடந்தை யாக இருக்கிறது.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் செயல்பட்டு வரும் கள்ளச்சாராய, சட்ட விரோத போதைக் கும்பல்களை கண்டறிந்து, அவர்களின் சமூக விரோத செயலை அடக்கிட வேண்டும் என்றும், இது போன்ற சமூக விரோதக் கூட்டங்களுக்கு தமிழ்நாட்டில் எப்போதும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். மேற்கண்ட இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் சிபிஐ(எம்) சார்பில் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் ஜூன் 25 அன்று  நடைபெறும். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  

;