districts

img

கழிவுநீர் தொட்டியில் மனிதனை இறக்கி சுத்தம் செய்யசொல்வதா! கடலூர் மாநகராட்சிக்கு சிபிஎம் மாவட்டச்செயலாளர் மாதவன் கண்டனம்

கடலூர், ஜூலை 25- கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை குழியில் மனிதனை இறக்கி சுத்தம் செய்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் விஷவாயு தாக்கியதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்ற மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கடலூர் மாநகராட்சி அதிகாரிகளின் போக்கை சிபிஎம்  வன்மையாக கண்டிக்கிறது. மேலும் மனித கழிவுகளை பாதாள சாக்கடைக்குள்ளே சுத்தம் செய்த இவர்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை மீறிய மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு போதிய நவீன உபகரணங்கள் மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் பயன்படுத்த வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென சிபிஎம் கடலூர் மாவட்ட குழு  சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.