court

img

ஒன்றிய அரசு இந்தியில் பதில் தரக் கூடாது.... சு. வெங்கடேசன் எம்.பி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு.....

மதுரை:
தமிழ்நாடு எம்.பிக்களின் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் போது, ஒன்றிய அரசு அலுவல் மொழிச் சட்டம் 1963 ஐ முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று நீதியரசர்கள் கிருபாகரன், துரைச்சாமி ஆகியோர் கூறியுள்ளனர். 

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எம்.பி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஒன்றிய அரசால் இந்தியில் பதில் அளிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் வியாழனன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.சு.வெங்கடேசன், எம். பி மத்திய ரிசர்வ் படையின் குரூப் ‘‘பி’’ மற்றும் குரூப் ‘‘சி’’ பிரிவுகளைச்சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான நியமன அறிவிக்கையில் இருந்த 9 தேர்வு மையங்களில் ஒன்று கூட தமிழகம், புதுச்சேரியில் இல்லை எனக் குறிப்பிட்டு, குறைந்தபட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கும், சி.ஆர்.பி.எப்பொது இயக்குநருக்கும் 09.10.2020 அன்று கடிதம் எழுதியிருந்தார். விண்ணப்ப தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார். 

இதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர்நித்யானந்த ராய் இடமிருந்து 09.11.2020 தேதியிட்ட பதில் கடிதம் வந்தது. அக்கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும்அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது என்றும், இதுகுறித்து ஒன்றிய உள்துறை இணை அமைச்ச கத்திற்கு 19.11.2020 எழுதிய கடிதத்திற்கு இதுவரைபதில் இல்லை என்றும், இந்திக் கடிதம் திரும்பப்பெறப்படவோ, அப்பதிலின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ முனையவில்லை என்றும்சு.வெங்கடேசன் தனது பிரமாண வாக்குமூலத் தில் குறிப்பிட்டு இருந்தார். இதுபோன்று தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது. அவர்கள் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்கிற ஜனநாயக அமைப்பின்நெறிகளைக் கருத்தில் கொள்ளாத நடைமுறையாகும் என்றும், பெரும் எண்ணிக்கை யிலான தமிழக மக்களால் ஒன்றிய அரசுக்கு தங்கள் குறைகளை முறையிட்டு எழுதப்படும் கடிதங்களுக்கும் இவ்வாறு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.இது அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியிருக்கிற உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார். 

வழக்கில் கோரப்பட்ட தீர்வுகள்
1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 ன் படியும், மாநிலங்களுக்கான தகவல் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும் என்பதே சட்டப்பூர்வமானது என்று அரசியல் சட்டப் பிரிவு226 ன் கீழ் உயர் நீதிமன்றத்தை அவர் நாடி யிருந்தார்.தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றியஅரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக் கூடாது என்றும், 09.11.2020 தேதியிட்ட ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் கடிதத்தின் ஆங்கில வடிவம் உடனே வழங்கப்பட வேண்டுமென்றும், தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென்றும், அலுவல் விதி முறைகளை மீறிய அரசு அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றம் கருதுகிற பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க  வேண்டுமென்றும் அதில்கோரியிருந்தார். 

தீர்ப்பு
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில்வியாழனன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ் நாடு எம். பிக்களின் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் போது ஒன்றிய அரசு அலுவல் மொழிச் சட்டம் 1963 ஐ முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று  நீதியரசர்கள் கிருபாகரன், துரைச்சாமி  ஆகிய நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளனர். வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், கண்ணன் ஆகியோர் சு. வெங்கடேசன் சார்பில் ஆஜராகினர்.

வெங்கடேசன் மகிழ்ச்சி; கனிமொழி நன்றி 
‘‘நான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான தகவல் தொடர்புகள் இந்தியில் அமையாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் பன்மைத்துவம், மொழிஉரிமையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை விழிப்புடன் தொடர்வோம். இக்கடமையில் என்றும் தமிழ்நாடு முன்னிற்கும். இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் பணி பாராட்டுக்குரியது’’ என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில்தான் பதில் அனுப்ப வேண்டும். இந்தியில் பதில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என மதுரை எம்.பி., தொடுத்த வழக்கில்உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.சு.வெங்கடேசன் எம்.பி.க்கு நன்றி என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

;