court

img

தேச துரோக வழக்கு பதிவு செய்ய தற்காலிக தடை

தேச துரோக வழக்கு பதிவு செய்ய தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேச துரோக சட்டத்த்தின் 124ஏ பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டை ஜூலை மாதம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த தேச துரோக சட்டம் அவசியம்தானா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் உதவிடுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், காலனித்துவ கால சுமைகளை அகற்றும் வகையில் , பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
தேச துரோகத்தை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவு தொடர்பாக நாட்டில் உள்ள சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் பொது தளத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும் நடைமுறைகள் முடிவடையும் வரை தேச துரோக சட்டப்பிரிவுகள் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது 124A  சட்டப்பிரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்யும் வரை வழக்குகளை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேச துரோக வழக்கின் கீழ் சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

;