court

img

பெகாசஸ்: விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை....

புதுதில்லி:
பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு பிரமாணப் பத்திரத்தை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்.அதில் “மனுதாரர்கள் கோரியபடி, பிரமாண பத்திரத்தில் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், ‘‘நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எந்த தகவலையும் ஒன்றிய அரசு வெளியிடத் தேவையில்லை’’ என்றுகூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்தமனுவில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்திப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. ஆதலால், மனுதாரர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 2-வது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனக் கோரப்பட்டது.இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமோ கோலி ஆகியோர் முன்னிலையில் பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஆயினும் அரசு சார்பில் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தி ஒன்றிய அரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்த தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் நீதிபதிகள், “ தேசியப் பாதுகாப்பை சமரசம் செய்யும் விதமாக எந்தத் தகவலையும் பிரமாணப் பத்திரத்தில் வெளியிட தேவையில்லை என நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வதாக இருந்தால் அது பற்றி ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;