court

img

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு!

தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உள்ளதாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 அன்று நடைபெற்றது. கடந்த காலங்களை போலவே நடப்பாண்டிலும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல்வேறு சர்ச்சை சம்பவங்களுடன் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவு, ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனா். ஆனால் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து இருந்ததால் சக மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் சந்தேகம் வலுத்தது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்த மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுக்காததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நீட் தேர்வை தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா, இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்த உள்ளதாகவும், வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட வேண்டும். கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும். மறு தேர்வுக்கு வர மறுக்கும் மாணவர்களுக்கு அவர்களின் அசல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 

;