court

img

காவல் நிலையங்களில் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல்; மக்களுக்கு துயரங்கள் நிகழ்கின்றன... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை....

புதுதில்லி:
காவல் நிலையங்களில்  மனித உரிமை களுக்கு அச்சுறுத்தலும் மக்களுக்கு பிற துய ரங்களும் ஏற்படுகின்றன என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா  வேதனை யுடன் தெரிவித்துள்ளார்.தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மூலம் பொதுமக்களின் சட்ட உதவிகளுக்கான மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.  சட்ட உதவி கோரும் விண்ணப்பத்தைநாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் சமர்ப்பிக்கும் சட்ட உதவி சேவைகள் செயலியை தலைமை நீதிபதி  வெளியிட்டார்.

பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா பேசியதாவது:சமூகத்தை சட்டம் ஆள்கிறது. இதில், வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கும் நீதி, எளியவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு முடிவற்ற முயற்சியாக இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஏனெனில், எளிய மக்கள் நீதி அமைப்புக்கு வெளியில் இருக்கிறார்கள். இந்த மொபைல் செயலி ஏழைகளுக்கும், சட்ட உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் ஆதரவாக இருக்கும். காவல் நிலையங்களில் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ரீதியான சித்ரவதைகள் அதிகமாக உள்ளது. காவல் நிலையங்களில் சித்ரவதை மற்றும் காவல்துறையினரின் கொடுமைகள் இன்னும் நம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளாக உள்ளன. இவை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசியல் சட்டத்தில் பிரகடனங்கள் மற்றும் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், காவல்நிலையங்களில் உறுதியான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாதது கைது செய்யப்பட்ட அல்லது விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள நபருக்கு பெரும் தீங்கு விளை விக்கும் நிலைமை உள்ளது. இது குறித்து நாடு முழுவதும் காவல்துறையினருக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல்துறையின் அத்துமீறலை கட்டுப்படுத்த, சட்ட உதவிக்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் இலவச சட்ட உதவி சேவைகள் கிடைப்பது பற்றிய தகவல்கள் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஒவ்வொரு காவல் நிலையம் அல்லது சிறைச்சாலையில் இலவச சட்ட உதவி சேவைகள் தொடர்பான அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;