மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று எஸ்.ஐ. ரகுகணேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஐ. ரகுகணேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.
வழக்கு தொடர்பான சிபிஐ ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும். பொய் சாட்சியம்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தவறான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை நீக்கக் கோரிய மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்ட எனது மனுவையும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்கவும் கோரிய மனுவையும் தள்ளுபடிசெய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்குதொடர்பான ஆவணங்களை எனக்கு தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சிபிஐ ஆவணங்களை தாக்கல் செய்யும் வரை வழக்கின் தற்போதைய நிலை தொடரவேண்டுமென (இடைக்கால தடை விதிக்க வேண்டும்) என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணையில் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.