சென்னை:
வாக்காளர் பட்டியலிலிருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக்கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தாக்கல் செய்த மனுவில், “2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்டப் பணிகளுக்காக கடந்த நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் கள் நடத்தப்பட்டன.ஆனால், அந்தத் தொகுதிகளிலுள்ள மறைந்த அதிமுக பிரமுகர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து இதுவரை நீக்கப்படவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் பெயர் நீக்க பணிகளை முடித்திருக்க வேண்டும்.
இதனை விவரித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் முன்பாக, முறையாக ஆய்வுகள் நடத்தி, இறந்த வாக்காளர்களின் பெயர் களை நீக்கி, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அடங்கியஅமர்வு முன்பு செவ்வாயன்று (ஜன.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து, வரும் 28ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இறந்தவர்கள் பெயர் களை நீக்குவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக பத்து ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.