மதுரை:
2017-2018-ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தமனுவில், “அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்களுக்கு தமிழகஅரசு இலவச மடிக்கணினி திட்டத்தின்கீழ் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சுமார் 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 9.12 லட்சம் இலவச மடிக்கணினி வாங்கப்பட்டது. இலவச மடிக்கணினியை பயன்படுத்தி பல அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2017-2018-ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி இது வரை வழங்கவில்லை. இதையடுத்து 2020-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் 2018-2019-ஆம் ஆண்டு முதல் 2020- 2021-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால் 2017-2018-ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் கொரோனா காலத்தில் இணையதளம் மூலம் வகுப்பு படிக்கவும், தேர்வு எழுதவும் சிரமப்படுகின்றனர்.எனவே 2017-2018- ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பள்ளி கல்வித் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.