cinema

img

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் “ஜெய்பீம்”  

ஜெய்பீம் திரைப்படத்தின் பாடல் மற்றும் காட்சிகள் உலக புகழ்பெற்ற ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.  

1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த படம் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யாவால் தயாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.  ஞானவேல் இயக்கிய இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. பல நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அந்த ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் ‘சீன் அட் தி அகாடமி’ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.  

அந்தவகையில் ஜெய் பீம் திரைப்படத்தின் பாடல் மற்றும் சில காட்சிகள்  உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் காட்சிகளை தங்களின் பிரத்யேக சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் சேனலில் தமிழ் திரைப்படம் ஒன்றின் பாடல்கள் மற்றும் காட்சிகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

;