cinema

img

காடு தமிழும் ஹாலிவுட்டும் கைகோர்த்த அந்தநாளின் அதிசயப் படம்...

தமிழ்த் திரைப்படம் ஒன்று சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1952இல் இந்திய - அமெரிக்கக் கூட்டுத்தயாரிப்பாக உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது என்கிற செய்தி எத்தனை வியப்புக்குரியது! ஆமாம்... அந்த நாளில் புதுமையின் தீவிரக் காதலரான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்தான் அமெரிக்காவின் வில்லியம் பெர்க் உடன் இணைந்து அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். அப்படியானால் அது வெறும் இந்திய - அமெரிக்கக் கூட்டுத்தயாரிப்பு மட்டும் இல்லை. தமிழ் - ஆங்கிலக் கூட்டுத்தயாரிப்பும்கூட அல்லவா? ஆமாம்... அதுதான் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் வெளியான காடு என்ற திரைப்படம். ஆங்கிலத்தில் தி ஜங்கிள் என்றும் பெயர் போட்டிருந்தார்கள். இந்திய வனங்களில் குறிப்பாக நீலமலைக் காடுகளில் படமாக்கப்பட்ட இந்தக் காடு திரைப்படத்தின் கதை இப்படிப் போகிறது. கொடூரமான கானகத்து விலங்கினங்களின் கூட்டமானது அதிகமான அளவில் மனிதர்களின் மரணத்திற்குக் காரணமாக உள்ளது. அடிக்கடி நிகழும் இத்தகைய மரணங்களுக்குக் காரணமான கொடிய விலங்கினத்தைக்  கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு ஒரு வெள்ளை இனத்து வேட்டைக்காரரும் ஒரு இந்திய இளவரசியும் காட்டிற்குச் செல்கின்றார்கள். அவர்களின் அந்தக் கடும் பயணத்தின்போது யானையைவிடப் பெரிய, வரலாற்று காலத்திற்கு முந்தையதான ஒரு ராட்சத விலங்குக் கூட்டத்தினைக் கண்டுபிடிக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தில் கனடாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ராட் கேமரோன், அமெரிக்க நடிகர் சீசர் ரோமெரோ, அமெரிக்க நடிகை மேரி வின்ட்சார், பாக்தாதிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இந்திய பேசாப்பட நட்சத்திரம் சுலோச்சனா என்ற ரூபி மியர்ஸ், இந்தித் திரைப்பட நடிகர் டேவிட் ஆபிரகாம், நம்ம ஊர் எம்.என். நம்பியார், ராமகிருஷ்ணா மற்றும் சித்ராதேவி போன்றோர் நடித்திருந்தார்கள். சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற அகாடமி விருதுபெற்ற கிளைட் டி வின்னா காடு படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டார். பாலு படத்தொகுப்பைச் செய்தார். படத்திற்கு இசை நம்முடைய அந்நாளைய இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன். ஹாலிவுட்டின் வில்லியம் பெர்க், தமிழ்ப் படங்களை இயக்கிவந்த அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கனுடன் இணைந்து இந்தக் காடு படத்தை இயக்கினார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தப் படம் வெளிவந்ததாகத் தெரிகிறது. அதிகச் செலவில்லாமல் எடுக்கப்படும் குறைந்த முதலீட்டுப்படங்களை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் புகழ்மிக்க லிப்பர்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது. 73 நிமிடங்களே ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் அற்புதமான வெளிப்புற இயற்கைக் காட்சிகளும், வனவிலங்குகளின் அணிவகுப்பும் மனதைக் கொள்ளைகொள்ளும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தாலும் கதைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்று இந்தப் படத்தைப் பற்றி எழுதினார் ஹால் எரிக்சன் என்ற சினிமா விமர்சகர்.  இந்தியாவின் இதயமாக விளங்கும் ஆபத்தான 10 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுள்ள வனங்களும், அந்த ஆபத்துகளுக்கெல்லாம் பெரிய ஆபத்தாக ஒரு பெண்ணும் என்றும் செபியா வண்ணத்தில் முழுவதும் மர்மங்கள் நிறைந்த இந்தியாவில் உருவானது என்றும் சுவரொட்டிகள் அமெரிக்க ரசிகர்களை மிரட்டின. எது எப்படி இருந்தபோதிலும் தமிழும் ஹாலிவுட்டும் கைகோர்த்து உருவான இந்த தி ஜங்கிள் என்ற காடுதான் இந்தியாவின் முதல் அறிவியல் புனைகதைத் திரைப்படம் என்று வரலாற்றில் பேர் பதித்தது. அத்துடன் அந்தப் பெருமை நம் தமிழுக்கும் வந்து வாய்த்தது.                 

;