சின்ன வயதில் தனது தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாகக் கூறியுள்ளார் நடிகையும் பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு. தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போதுதான் இதை அவர் கூறியுள்ளார். பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு மேலும் சொல்லியிருப்பது: “ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ தனது இளம் வயதில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டால் அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அந்தக் காயம் தொடரும். எனது அம்மா மோசமான திருமண வாழ்வைச் சந்தித்தவர். மனைவியையும் குழந்தையையும் அடிப்பது தனது பிறப்புரிமை என்று நினைத்தவர் என் தந்தை. அவர் தனது ஒரே மகளைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். எனக்கு அப்போது வயது 8. குடும்பத்தில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதியதால் பல ஆண்டுகளாக வாய்மூடி இருந்துவிட்டேன். எனக்காக நானே நிற்கவேண்டிய நேரம் வந்தது. அப்போது என் வயது 15. நான் வெளிப்படையாகப் பேசினேன். என்ன செய்தாலும் அவர் தன் கணவர் என்பதாகவே அம்மா இருந்தார். எனினும் என் தந்தைக்கு எதிராக நான் துணிவோடு பேசினேன். என் 16 வயதில் அப்பா எங்களை விட்டுப் போய்விட்டார். அடுத்த வேளை உணவு எங்கிருந்து எங்களுக்கு வரும் என்று தெரியாத நேரம் அது!” - இவ்வாறு அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார். சொந்த அனுபவத்திலிருந்து ஆணுக்கு - ஆணாதிக்கத்திற்கு எதிராக பாஜக வின் முக்கிய நபர் இப்படிப் பேசியிருப்பது வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.