cinema

img

மனித இனத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுவதே நல்ல கலை! - சோழ. நாகராஜன்

“கலைஞர்கள் தாங்கள் அணியும் ஆடையிலும், பிடிக்கும்  பேனாவிலும், இன்னும் சில விஷயங்களி லும் பொழுதுபோக்குப் புதுமையைத் தேடி  ரசிக்கிறார்கள். ஆனால், தாங்கள் ஆக்கும் கலா சிருஷ்டிகளில் மட்டும் புதுமையைத் தேட மறந்துவிடுகிறார்கள்!” - இப்படிச் சொன்னவர் நமது மரி யாதைக்குரிய பழம்பெரும் தமிழ் நகைச்சுவையரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர். பதிப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ - பத்திரிகையில் கலைவாணர் எழுதிய கட்டுரை ஒன்றில்தான்  மேற்கண்ட ஆதங்கங்களை அவர் கொட்டியிருந்தார். கலைவாணர் வெறும் நடிகர் மட்டுமல்லர். அவர் ஒரு சிறந்த பாடகருமாவார். இசையும் அவ ருக்கு இசைந்த கலைதான். அவர் ஒரு நல்ல மேடைப்பேச்சாளர். அத்தோடு அவர் ஒரு ஓவியரும் எழுத்தாளருமாவார். அவர் எழுதிய அந்தக் கட்டுரையின் தலைப்பு இப்படியிருந்தது: “கலையும் வளர்கிறது; களையும் வளர்கிறது...”  மக்களுக்குப் பயனுள்ளவிதத்தில் கலை வளரவேண்டும் என்பதே கலைவா ணர் எழுதிய அந்தக் கட்டுரையின் உயரிய நோக்கம். நடிகன் குரல் பத்திரிகை 1955 கால கட்டத்தில் தொடங்கப்பட்டது. அந்தக் கட்டு ரையும் அதையொட்டியே எழுதப் பட்டிருக்கவேண்டும். அப்படியெனில் இன்றைக்கு ஏறக்குறைய 67 ஆண்டு களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை அது.  அன்றைக்கு தமிழ்க்கலையின் - குறிப்பாகத் தமிழ்சினிமாவின் நிலை எத்தனை அவலம் நிறைந்ததாக இருந்தது என்று மனம் வெதும்பிப் படம் பிடிக்கிறார் அதில் கலை வாணர். வியப்பும் வருத்தமும் என்ன வெனில், இன்றைக்கு வாசித்தாலும் அது இன்றைய நிலைமையோடும் அப்படியே பொருந்துவதுதான்.  மேலும் அந்தக் கட்டுரை இப்படிப் போகிறது:

“நல்ல நல்ல கருத்துக்களை நாட்டுக்குச் சொல்லத்தக்க புனிதமான சாதனமே கலைதான் என்பதை மறந்துவிடுகிறார்கள். தங்களின் சுகபோக வாழ்வுக்கு உதவும் ஒரு சக்தியே கலை என்ற எண்ணம். பாவம், அவர்களையறியாமலே அவர்கள்பால் உதித்துவிட்டது.” கலைஞர்கள் தங்களின் சுகபோக வாழ்வுக்கான கருவியாகக் கலையைக் கருதலாகாது என்று வலியுறுத்தும் கலைவாணர் மேலும் சொல்கிறார்: “அதன் பயனாய் மற்றவர்களின் முன்னே தமிழ்க்கலை சற்றுப் பின்வாங்கி  நிற்க நேரிடுகிறது. இதை இன்றைய கலைஞர்கள் யாவருமே உணர வேண்டு கிறேன்.” இப்படிச் சொல்லிவிட்டு இதைச்  சொல்ல தனக்கு உள்ள உரிமையின் அடிப் படையையும் சொல்லிவிடுகிறார் இப்படி:  “எனக்கு அவர்கள் தந்திருக்கும் பெருமை யினால் ஏற்பட்ட உரிமையினால்தான் இப்படி வற்புறுத்தியும் பேசுகிறேன்.”

பொதுவாக தமிழ்த்திரைப்படத்தின் புராணவகை உள்ளடக்கத்தைப் பார்த்து கொதித்துப்போய் அவர் இப்படிச் சொல்கிறார்: “மந்திரவாதி, மாயாஜாலம், சாபம், பற்பல அற்புதக் கற்பனை அவ தாரங்கள் இது பற்றிய கதைகளைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புகூட வருவதில்லை, கோபமே வருகிறது...” யோசித்துப்பார்த்தால் கலைவாணர் காலத்தில் மட்டுமா இப்படியான நிலை? இன்றைக்கும்தானே காஞ்சனாக்களும், மாயாக்களும், நீயா 2, அரண்மனை, நானே வருவேன் என்றெல்லாமும் கணினி அறிவியலின் துணையோடு விதம் வித மான பேய்ப்படங்கள் வந்து மிரட்டிக் கொண்டேயிருக்கின்றன.  கலைவாணர் தன் காலத்தின் வணிக நோக்கிலான மசாலா படங்களின் லட்ச ணத்தை அந்தக் கட்டுரையில் அவர் எப்படி  வரையறுக்கிறார் பார்ப்போமா? அது அப்படியே இப்போது நம் காலத்திற்கும் பொருந்தும் அதிசயத்தைப் பாருங்கள். சொல்லப்போனால் அது அதிசயமன்று, அவலம் என்று புரியும்.  “சரி, தற்கால வாழ்வை ஒட்டிய கதை களைப் பார்க்கச் செல்வோம் என்று சென்றால் அங்கே கதாநாயகன், கதாநாயகி, ஒரு காதல், ஒரு டூயட், ஒரு பேத்தாஸ், ஒரு  டிரீம், இடையில் ஒரு வில்லன், இறுதியில் ஒரு கிளைமேக்ஸ், சுபம்!” நகைச்சுவைக் கலைஞரில்லையா? அந்தப் பத்தியை இப்படி முடிக்கிறார் கலைவாணர்: “பதி னேழு, பதினெட்டாயிரம் அடி நீளமுள்ள ஒரு  படம். ஆதலால், பஸ்ஸும் கிடைக்காமல் கடைசியில் காட்டப்பட்ட சுபத்தை நினைத்து கொண்டே சோகத்தோடு வீட்டிற்கு நடந்தே வரவேண்டியதாயிற்று.”

சரி, அப்போதும் இப்போதும் நல்ல சினிமா முயற்சிகள் இல்லவே இல்லையா? அதையும் கலைவாணர் காணத் தவற வில்லை. அத்திப்பூத்தாற்போல வரு டத்திற்கு ஓரிரு நல்ல படங்கள் வருகின்றன என்கிறார் அவர். நல்ல கதையம்சத்தோடு கூடிய உள்ளடக்கமும், சொல்லும் விதத்தில் பார்வையாளரிடத்தில் ஈர்ப்பை  உண்டுபண்ணும் புதுமையான செய்நேர்த்தி மிக்க உருவாக்கமும் இல்லாத, அத னாலேயே திரையரங்கங்களில் ஓடாத  சினிமாக்களை ‘பட்டிக்காட்டுப் பொண்ணுங் களைப்போல பட்டணத்தில் நின்று உலவாமல் கூச்சப்பட்டு டப்பாவுக்குள் போய் ஒளிந்துகொள்ளுகின்றன’ - என்று பகடி செய்கிறார். தனது கலையின் நோக்கம் பற்றியும் கலைவாணர் எழுதுகிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் கண்ணோட்டம், பகுத்தறிவு, சாதி - மத பேதங்களைக் களைதல், ஆண் - பெண் சமத்துவம், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல் போன்ற உயரிய சிந்தனைகள் அனைத்தையும் கலைவாணர் தன் நகைச்சுவைக் கலையின் வாயிலாகவும், பாடல்கள் மூலமாகவும் மக்களிடையே பரப்பியவர் அல்லவா?  1957 ஆம் ஆண்டு ‘கலைச்சோலை’ என்ற இதழின் பொங்கல் மலரில் அவர்  எழுதிய இன்னொரு கட்டுரையில் கலை வாணர் சொல்கிறார்: “என் கலையுலகப் பயணத்தின் ஆரம்ப நாட்களிலேயே நல்ல படிப்பினைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று என் உள்ளம் விரும்பியது. திரைப்படக் கலையுலகுக்கு வருமுன்னரும் நாடக நாட்களிலே நான் ஒவ்வொரு படிப்பினைகளை நாடகங்களின் மூலம் சொல்லிவந்திருக்கிறேன். இப்படி மற்றவர்களுக்கு ஏதேனும் நல்ல படிப்பினை கூறவேண்டும் என்று என் மனதில்  தோன்றுவதற்குரிய காரணம் என்ன? பிரச்சனைகளால் சூழப்பட்ட என் இளமை வாழ்வு என்னை சிந்திக்க வைத்தது. சிந்தித்தேன். அதன் பயனே யாவும்.” 

இந்தக் கட்டுரை (1957 ஆகஸ்ட் 30இல்) அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் எழுதியது. இறுதிவரை அவரது உள்ளம் ரசிகர்களின்மீது எத்தனை அன்பு மயமாக இருந்திருக்கிறது என்பது இத னால் விளங்குகிறது. கலையின் உயரிய நோக்கம் என்னவென்றும் அவர் விளக்கு கிறார். அந்தக் கட்டுரையை இப்படி முடித்திருப்பார் கலைவாணர்: “இனிமேலும்கூட படங்களில் புதுப்புதுப் படிப்பினைகளைச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் என்னுள்ளே வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகில் வாழும் மனித இனங்களைப் பற்றிய பிரச்ச னைகளை நல்ல வழியில் தீர்ப்பதற்குத் தான் கலை உபயோகப்பட வேண்டும் என்பதே என் முடிவான முடிவு - தீர்ப்பு! இயற்கையின் அழகை மட்டும் வர்ணிக்கும் கலைஞன் தன் முழு வேலையைச் செய்து முடித்துவிடுவதில்லை. அது சாதாரணமான ஒரு பெயிண்டரின் வேலைதான். இதைப் படத் தயாரிப்பாளர்கள் எல்லோரும் தெரிந்துகொள்ளும் நாள் என்றோ?”  தன் காதல் மனைவி டி.ஏ.மதுரத்துடன் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இணையற்ற கலைஞர் அவர். ஒரு  சராசரி நடிகனாக அல்லாமல், மக்கள் கலையின்மீதான புரிதல் மிக்க தத்துவத் தெளிவோடு வாழ்ந்து காட்டிய மதிப்புமிக்க தொரு பெருங்கலைஞர்தான் கலைவாணர்! 

;