cinema

img

“கரடிகள் இல்லை” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

ஈரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் ஜாஃபர் பனாஹி.இவரின் படங்கள் உலக அளவில் கவனிக்கப்படுபவை.

ஈரானின் சமூக மற்றும் கலாச்சார பிற்போக்கு கட்டுப்பாடுகளை இவர் சினிமா மூலம் தொடர்ந்து விமர்சனங்களால் முன்வைத்தவர். இதனை சகிக்க முடியாத அரசு, 2010 இல் இவரை கண்டனம் செய்த தோடு, திரைப்படம் எடுப்பதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் இருபது ஆண்டு கள் தடை விதிக்கிறது. இத்தடையை சாதுர்யமாக முறியடித்து பல படங்கள் எடுத்துள்ளார்.அதில் ஒன்றே, 2022 இல் வெளிவந்த நோ பியர்ஸ் “No Bears” (கரடிகள்இல்லை) டெஹ்ரானிலிருந்து தொலைதுரத்தி லுள்ள ஜபான் என்ற இணைய வசதி ஓரளவு  உள்ள கிராமத்தில் தற்காலிகமாக வாடகை  வீட்டில் தங்குகிறார் இயக்குநர் ஜாஃபர் பனாஹி.இக்கிராம எல்லையை யொட்டி உள்ளது ஒரு சிறிய துருக்கி நகரம்.இந்நக ரத்திற்கு, படக்குழுவினரை உதவி இயக்கு நர் ரேஸா தலைமையில் அனுப்புகிறார். லைவ்ஸ்ட்ரீமிங் (Livestreaming), என்ற நிகழ்நேர சம்பவங்களை நெருக்கமாகப் பகிர்கின்ற தொழில்நுட்ப உதவியோடு, படப்பிடிப்பை வீட்டில் இருந்தவாறே கட்டுபடுத்துகிறார்.அதாவது,படப்பிடிப்பு தளத்திற்குச் செல்லாமல், குழுவினருக்கு, ரேஸா வழியாக ஆணை பிறப்பித்து, ரகசிய மாக ஒரு டாகுடிராமா “DocuDrama”வகைப் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், அக்கிராமத்தின் இயற்கையழகையும், மனிதர்களின் அழகையும் புகைப்படம் எடுப்பது,சடங்கு சம்பிரதாயங்களை பிறரின் உதவியோடு வீடியோ எடுப்பதும், ஜாஃபரின் பொழுது போக்கு.         

அவ்ஊரில் ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது.பெண் பிள்ளைகள் பிறந்து  தொப்புள்க் கொடி அறுக்கும் சமயத்தில், எதிர்கால கணவன் யாரென்று குடும்பத்தால் முடிவெடுக்கப்படும். பெரியவளான பின்ன ரும், இம்முடிவை மீறி, வேறு எவரையும் அப்பெண் மணமுடிக்கக் கூடாது. ஹோஸல் என்பவள் பிறக்கும் போது இவளுக்கான கணவன் ஜேக்ஹோப் என  குடும்பத்தார்  முடிவெடுக்கின்றனர். வளர்ந்த  ஹோஸல், அதே கிராமத்தைச் சேர்ந்த ஷோல்டுஸ் என்ற படித்தவனை காதலிக்கி றாள். ஒருநாள் காதலர்கள் இருவரும் மரத்தடி யில் மறைவாக பேசிக் கொண்டிருப்பதை, ஜஃபரின் கேமரா வழக்கம் போல் எதேச்சை யாக கிளிக் செய்து விடுகிறது. இதனை அங்கு  விளையாடும் சிறுவன் பார்த்து விடு கிறான்.இவன் மூலம் கணவனாக நிச்ச யிக்கப்பட்ட ஜேக்ஹோபிற்கு தகவல் செல்கி றது. ஊர் பஞ்சாயத்தை ஜேக்ஹோப் கூட்டு கிறான்.சாட்சிக்கு ஜாஃபர் எடுத்த புகைப் படம்,தேவைப் படுகிறது.         பஞ்சாயத்திற்கு பிரச்சனை வருவதற்கு முன்னர் காதலர்கள் தனித்தனியே ஜாஃபரை ரகசியமாக சந்திக்கின்றனர்.புகைப்படத்தை பஞ்சாயத்தாரிடம் வழங்கி  விட்டால், தங்களை உயிரோடு கொன்று விடு வார்கள்.எனவே வழங்க வேண்டாம்  என மன்றாடுகிறார்கள். பஞ்சாயத்தார், ஜாஃபரிடம், காதல் ஜோடியின் புகைப் படத்தை வழங்கும்படி கேட்கின்றனர். ஜாஃபர் என்ன செய்தார்?காதலர்களின் உயிர் என்னவானது? இது ஒரு கதை அடுக்கு. ரகசியமாக ஜாஃபர் தயாரிக்கும் சினிமா வுக்கான திரைக்கதையில் வரும் காதல் ஜோடி யான பக்டியர் மற்றும் ஜாரா ஆகியோர் நிஜ வாழ்விலும் காதலர்கள். நாட்டை விட்டு வெளி யேறி பிரான்சில் குடியேறும் எண்ணத்தில்  உள்ளவர்கள்.இவர்கள்,நடிப்பதற்கு கை மாறாக,கடவுச்சீட்டு ஏற்பாடு செய்வதாக ஜாஃபர்,உறுதி அளித்துள்ளார்.புலம்பெய ரவுள்ள இவர்களின் வாழ்வை அடிப்படை யாக கொண்டு இந்த ரகசிய சினிமா, ஜாஃப ரால் எடுக்கப்படுகிறது. தடையின் காரண மாக ரிமோட் கண்ட்ரோலில் வீட்டிலிருந்து இப்படத்தை இயக்குகிறார். 

முதலில் ஜாராவுக்கு மட்டும் போலி கடவுச்  சீட்டு கிடைக்கிறது. பக்டியருக்கு கடவுச்சீட்டு வராததால், ஜாரா,அவனை விட்டுச் செல்ல மறுக்கிறாள். பின்னர் பக்டியருக்கும் போலி கடவுச்சீட்டு கிடைக்கிறது.இருவரும் புறப்படுவது போன்ற  காட்சி படமெடுக்கையில் ஜாரா,கேமராவை நிறுத்தச்சொல்லி, இணையவழியில் ஜாஃபரிடம்,”பத்து வருடமாக இந்நாட்டை  விட்டு புலம் பெயர போராடி தோற்றுக் கொண்டே இருக்கிறோம்.எங்களது வாழ்வை அடிப்படையாக வைத்து சினிமா எடுப்பதாக கூறினீர்கள்.நீங்கள் எடுக்கும் சினிமாவின் நல்ல முடிவுக்காக எங்களை பயன்படுத்துகிறீர்கள்.எங்களுக்கு ஏற்பாடு செய்த கடவுச்சீட்டோ போலியானது.நீங்கள்  நம்பிக்கை துரோகம் செய்துள்ளீர்.எல்லோ ரும் போலியானவர்களே.இங்கு உண்மை யே இல்லை”என ஜாஃபரை திட்டி,கண்ணீர் விடுகிறாள் ஜாரா.பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு வராமல் காணாமல் போகி றாள்.காதலனும்,படக் குழுவினரும் தேடி  அலைந்து ஜாராவை ஒருவழியாக கண்டு பிடிக்கிறார்கள்.

இறுதிக் கட்ட படப்பிடிப்பு. ஏரியோரத்தில் பிணம் கிடப்பதாக அறிந்து பக்டியர் கதறி ஓடுகிறான். ஜாராவாக இருக்கக்கூடாது என  எண்ணிக்கொண்டே,பிணத்தை பார்க்கி றான்.ஆனால்,அது ஜாரா. பக்டியர் அதிர்ச்சி யில் கதறுகிறான். இயக்குநர் ஜாஃபர் ரிமோட் கண்ட்ரோலில்”கட்”சொல்ல, படப்பிடிப்பு முடிகிறது.இது மற்றொரு கதை அடுக்கு. பிற்போக்கின் கொடுமை மற்றும் வாழ்வு தேடி புலம்பெயர்தலுக்கான போராட்டம் என்ற இரு அடுக்குகளும் நிஜமும் நிழலு மாக சமதளத்தில் விறுவிறுப்பாக நகர்ந்து சோகத்தில் முடிகின்றன. இரு கதைகளிலும்,ஜாஃபர் பனாஹி  முக்கிய பாத்திரம் வகித்து சிறப்பாக நடித்த தோடு,கதை எழுதியும், தயாரித்தும், இயக்கி யும் பல பரிமாணங்களில் அசத்தியுள்ளார். காதலர்கள் ஹோஸல் மற்றும் ஷோல்டு ஸை தான் புகைப்படம் எடுக்கவில்லை யென,பஞ்சாயத்தார் முன்பாக,மறுநாள் காலையில் குரான் மீது சத்தியம் செய்வதாக உறுதியளித்த ஜாஃபர், இரவில் தனிமையில் நடந்து செல்கிறார். அப்போது, கரடி நட மாட்டம் உள்ளது. இரவில் தனியே செல்ல வேண்டாமென எச்சரித்து, தேநீர் அருந்த ஜாஃபரை அழைக்கிறார் ஊர்க்காரர் ஒருவர்.  இருவரும் தேநீர் அருந்திக் கொண்டே உரை யாடுகின்றனர். ஜாஃபரின் நிலையறிந்த அவர், “உண்மையைக் காக்க, குரான் மீது பொய் சத்தியம் செய்வது தவறில்லை என்றும், தைரியமாக தனியே செல்லுங்கள்,  கரடி நடமாட்டமெல்லாம் கிடையாது. பயத்தை உருவாக்கவே கரடி கதை சிருஷ்டிக்கப்பட்டுள்ளது”, எனத் தற்போது உண்மையைச் சொல்லி ஜாஃபரை வழி அனுப்புகிறார். இருவரது ஆழமான உரையா டலுக்கு பின்னர், இருந்த கரடி, இல்லா மல் போகிறது. இங்கு உண்மை என்பது காலங்காலமாக கட்டமைக்கப்பட்டவைகளை சீர்தூக்கிப் பார்த்து தெளிவடைவதே என்பதை இக்காட்சி நுட்பமாக உணர்த்தியுள்ளது.

ரகசியப் படப்பிடிப்பு நடத்திய அமின் ஜஃபாரின் ஒளிப்பதிவு துல்லியமானது.கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் செய்யப்  பட்ட படப்பதிவுகளை சிறப்பாக தொகுத்துள்ளார் எடிட்டர் அமீர் எட்மினன். இறுதியில் நிஜக் காதலர்களின் சோக முடிவை கேள்விப்பட்ட ஜாஃபர், பதற்றத்தில்,ஓட்டுநர் இருக்கையில் பெல்ட் போடாமல் கார் ஓட்டுகிறார். அச்சமயம் வரும்  எச்சரிக்கை சத்தமானது, ஜாஃபரின் மனத்துயரத்தின் அடிநாதமாகவும், காரை நிறுத்தி கை பிரேக் போடும் சத்தமானது, பிற்போக்கு சிந்தனையின் மீது,கோபக்கனலால் அறையும் சப்தமாக வும் உணர முடிந்தது. அந்த வகையில் லைவ் சவுண்டை (Live Sound-ஐ) கதைக்கு ஏற்றவாறு பொருத்தமாகப் பயன்படுத்திய இயக்குநரின் யுக்தி  சிலிர்ப்பூட்டுகிறது.     தொப்புள் கொடியோடு  பெண்களின் சுதந்திரமும் அறுபடுவதையும்;சாதிய ஆண வக் கொலைகள் இந்தியாவில் மட்டுமன்றி ஈரானிலும் வேறு  வடிவத்தில் உள்ளது என்பதையும் வருத்ததோடு நினைவூட்டியது இப்படம்.           2022 வெனிஸ் திரைப்பட விழாவில் ஸ்பெஷல் ஜூரி பரிசை வென்றுள்ள இப்படம், பிரைம் அமேசானில் உள்ளது. தமுஎகச, நடத்திய திருவாரூர் உலகத்திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.