சென்னை:
திரைக்கலைஞர்கள் நெல்லை சிவா இளமாறன் அவர் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தமிழில் பேசி ரசிகர்களின் மனங்கவர்ந்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா என்கிற சிவானந்தன் (69) துணை நடிகர் இள.மாறன் (46) ஆகியோரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் பிறந்த நெல்லை சிவா கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் திரையில் தோன்றிய அற்புத நகைச்சுவை நடிகர்.இவர் பேசும் நெல்லை வட்டார வழக்கு சொற்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. கடினமான வாழ்க்கை சூழலில் திருமணம் செய்து கொள்ளாத நெல்லை சிவா கலையுலக வாழ்க்கை நிலைப்படும் போது மாரடைப்பு உயிரை பறித்து விட்டது பெரும் வேதனையாகும்.
இதேபோல் துடிப்பான இளைஞர், சமூக செயல்பாட்டாளர், துணை நடிகர் என பன்முகத் திறன் கொண்ட கலைஞர் இள.மாறன் (46) கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டது. நெஞ்சை பிசையும் துயரமாகும். இள.மாறன் குடும்பத்தினர் கலை இலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து செயல்படுபவர்கள்.இள.மாறனின் வாழ்விணையர் கிளாராவுக்கும், மகள் ஏஞ்சல்சுக்கும் எந்த வார்த்தை கூறியும் ஆற்றுப்படுத்த முடியாத பெரும் வேதனையாகும்.கலைஞர்கள் நெல்லை சிவா, இள.மாறன் ஆகியோர் மறைவுக்கு கட்சியின் மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.