cinema

img

கமல் எடுக்க விரும்பிய பொன்னியின் செல்வன்... - சோழ. நாகராஜன்

கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வரஇருப்பது தெரிந்ததுதான். இரண்டு பாகங்களாகத் தயாராகிற இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 அன்று வெளிவருகிறது. லைக்கா புரொடக்டன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான்.  இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னை நேரு உள்  விளையாட்டு அரங்கில் செவ்வாயன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்கள். அப்போது கமல் பேசியது: பொன்னியின் செல்வன் படத்தின் உரிமையை எம்ஜிஆர் வாங்கி வைத்திருந்தார். நான் அதைக் கேட்டேன். அவர் என்னிடம் அந்த உரிமையைத் தந்தார். ஆனால் சீக்கிரமாக படத்தை எடுத்துவிடு என்றார். அதன் பொருள் அப்போது எனக்குப் புரியவில்லை. என்னால் உடனே படத்தை உருவாக்க இயலவில்லை. படத்தை எடுக்க நினைத்தபோது வந்தியத்தேவன் பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்கவேண்டும் என்றார் சிவாஜி.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தேன். எனக்கு எந்தப் பாத்திரம் என்று கேட்டேன். நீ அருண்மொழி வர்மன் பாத்திரத்தைச் செய் என்றார். இவை எதுவுமே நடக்காமல் போயிற்று. மணிரத்னம் வைராக்கியமாக இருந்து அதைச் சாதித்துவிட்டார். அவரின் வெற்றிப் படங்களில் மிக முக்கியமான படமாக இது இருக்கும் என்றார். 

;