ஒன்றிற்கு மேலான மலர்களின் தொகுப்புதானே மாலை என்பது? அப்படியான ஒன்றிற்கும் அதிகமான சின்னச்சின்ன படச்சுருள்களின் தொகுப்பே இந்த மணிமாலை. இதில் நான்கு குறும்படங்கள் இடம்பெற்றிருந்தன. எல்லாமே நகைச்சுவை ரசம்தான். இந்தமாதிரியான வழக்கம் தமிழ் சினிமாவில் 1930 களின் பிற்பகுதியிலும், 1940 களின் முற்பகுதிகளிலும் இப்படியான குறும்படங்களைத் தொகுத்து ஒரே பெயரில் திரையிடுவது இருந்தது. 1939-இல் சிரிக்காதே என்ற பெயரில் நகைச்சுவைத் தொகுப்பு வெளிவந்தது. அது அப்போது மிகவும் வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது. அதில் ஐந்து சிறிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. வெவ்வேறு நடிக - நடிகைகள், வெவ்வேறு இயக்குநர்கள் என்றிருந்த இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையம்சத்தைக் கொண்டிருந்தது. இதனை அந்நாளின் சினிமா ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசன் விநியோகித்தார். பிரபல கார்ட்டூனிஸ்ட் மாலியின் கார்ட்டூன்களை இதற்கான விளம்பர உத்தியில் பயன்படுத்தியிருந்தார் வாசன். இதன் வெற்றி பலரையும் இதுபோன்ற தொகுப்புப் படங்களை உருவாக்கத் தூண்டியது. அப்படியானதொரு தொகுப்புத் திரைப்படம்தான் மணிமாலை. 1941இல் இது வெளிவந்தது.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தென்னிந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவின் பின்புலத்தோடு கோவையில் நடத்திவந்த அசோகா பிக்சர்ஸ் நிறுவனத்தின் பல வெற்றிகரமான முயற்சிகளில் இந்த மணிமாலையும் முக்கியமான ஒன்றாகும். 4 இன் 1 என்று அன்றே அடையாளப்படுத்தப்பட்ட இதில் ஒவ்வொரு குறும்படமும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமாக இருந்தது. அவை ஆஷாடபூதி, மைனரின் காதல், அப்பூதி அடிகள், நவீன மார்க்கண்டேயர் ஆகிய நான்கு குறும்படங்களாகும். மணிமாலையின் முதல் குறும்படம் ஆஷாடபூதி. அந்நாளைய தயாரிப்பாளரும், பல படங்களை இயக்கியவருமான ஃபிராம் சேத்னா இதை இயக்கியிருந்தார். பி.பி.ரங்காச்சாரி, டி.வி.சேதுராமன், எம்.ஆர்.சுப்பிரமணியம், ஜெயா போன்றோர் நடித்தார்கள். தன்னிடம் உதவியாளராகப் பணியிலிருக்கும் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடந்துகொள்ளும் பணம்படைத்த பாகவதர் பற்றிய கதைதான் இந்த ஆஷாடபூதி. கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருந்தார்கள்.
இரண்டாவதாக மைனரின் காதல் இடம்பெற்றது. பிரபல நகைச்சுவை நடிகர் டி.எஸ்.துரைராஜ் வெற்றிகரமான கிண்டி ரேஸ் பந்தயக் குதிரைகளின் உரிமையாளர். அவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும்கூட. இந்தப் படத்தில் மைனர் வேடத்தில் நடித்தார். மைனர் என்றால் அந்தநாளில் கவலைகளில்லாமல் சுற்றித் திரியும் பரம்பரைப் பணக்கார இளைஞனைக் குறிக்கும். தாயார் பார்த்துவைத்த பெண்ணை மணக்க மறுக்கும் மைனர் ஒரு மடத்தில் போய்ச் சேருகிறார். பெண்களை எப்படிக் கவர வேண்டும் என்பதை அறியும் ஆவல் அவருக்கு. அங்கே பணியில் இருக்கும் திருமணமான பெண்ணை ஒருதலையாய்க் காதலிக்கிறார். அவளுக்குத் திருமணமான விசயம் தெரியாது. கணவன் வந்து அவளை அழைக்கையில்தான் சிக்கலை மைனர் உணர்கிறார். மைனர் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம்தான் மீதி கதை. துரைராஜுடன் எம்.ஆர்.சுவாமிநாதன், சேதுராமன், ஆதிலட்சுமி போன்றோரும் நடித்தார்கள். மூன்றாவது படம் அப்பூதி அடிகள். மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட பக்திக் கதை. சிவனடியாரும் கவியுமான அப்பர் அப்பூதி அடிகள் வீட்டில் விருந்துண்ண வருகிறார். அடிகளின் மகன் அவருக்காக வாழை இலை பறிக்கக் கொல்லைப்புறம் செல்கிறபோது அங்கே விஷப் பாம்பு தீண்டி இறக்கிறான். அப்பரின் தெய்வீக சக்தியால் அவன் உயிர் பிழைக்கிறான். இதுதான் கதை. இதில் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி நடனக் கலைஞர் கிருஷ்ணா பாயுடன் இணைந்து ஆடும் ஒரு நடனக் காட்சியும் இடம்பெற்றது.
நவீன மார்க்கண்டேயர்தான் நான்காவதும் இறுதியானதும். என்றும் இளமையுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேய புராணத்தின் ஈயடிச்சான் காப்பிதான் இந்தப் படம். டி.ஆர்.ராமச்சந்திரன் மார்க்கண்டேயனாக நடித்தார். காளி என். ரத்னம் எமதர்மன். ஏ.டி.கே. என்று அறியப்பட்ட ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கினார். படத்தில் பாடல்கள் உண்டு. ஆனால், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய விபரங்கள் ஏதும் இல்லை. மொத்தத்தில் இந்த மணிமாலை மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. கிண்டியிலிருந்த வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடந்தது. சிறந்த நகைச்சுவை நடிகர்கள் பலரும் பங்களிப்பு செய்த படம் என்பதால் ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது.