business

img

இங்கிலாந்தில் இரவு பானம்! இந்தியாவில் காலை பானமா?

என்.சிவகுரு

ஹார்லிக்ஸ் சமீபத்தில் அனைத்து நாளிதழ்களிலும், முன்னணி வார இதழ்களிலும், ஒரு புது விளம்பரத்தை தந்திருந்தது. சிறு தானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், திணை கலந்த இனிய சுவை மிக்க பானத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். பாரம்பரிய பானம் எனவும் குறிப்பிட்டு இருந் தது. இந்த விளம்பரம் என்னை ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்தது. லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் என்பதற்கு இதுவே சாட்சி. பாரம்பரிய உணவு வகைகள் பற்றிய விழிப்புணர்வு புலர்ந்து வரும் நேரத்தில் இப்படியொரு மாற்றத்தை தக வமைத்து கொள்வதில் பெரும் வணிக நலன் மட்டுமே இருப்பதை நாம் கவனிக்காமல் இருந்து விட முடியாது.
ஹார்லிக்ஸ் உருவான வரலாறு  
ஜேம்ஸ் மற்றும் வில்லியம் ஹார்லிக் என்ப வர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மால்ட் அடிப்படையிலான சிறு துகள்கள் கொண்ட பானம் ஹார்லிக்ஸ். இதை எப்படி சந்தைப் படுத்துவது என்பது அவர்களுக்கு பெரும் கேள்வியாக இருந்தது. இங்கிலாந்தில் அக்காலத் தில் அவ்வளவு எளிதாக மக்கள் பயன்படுத்தும் பானங்களை வர்த்தகம் செய்ய இயலாது. ஆகவே அவர்கள் இருவரும் இந்த கண்டு பிடிப்பை எப்படி விளம்பரப்படுத்தினால் விற்பனை செய்ய முடியும் என தீவிரமாக யோசித்தனர். விளைவு “இது தானியங்களின் கலவை என்பதாலும், மனித சக்திக்கு (தேவைக்கு) அதிகமாக இவை தேவைப்படுவ தாலும், அதுவும் குறிப்பாக வளரும் மற்றும் சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத் துக்காக ஊட்டச் சத்து அதிகம் தேவை என்பதா லும்” என்று இதை குழந்தைகள் மற்றும் திட மான உணவு எடுக்க முடியாதோருக்கான மாற்று உணவாக விளம்பரம் செய்யப்பட்டது.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இதை உணவுக்கு மாற்றாக சக்தியூட்டும் பான மாக பாலில் கலந்து குடிக்கலாமென சொல்லப் பட்டது. அது இப்போதும் 21ஆம் நூற்றாண்டி லும் தொடர்கிறது. ஒருவர் உடல் நலம் குன்றி சுகவீனமாக இருக்கிறார் என்றாலே அவரை நலம் விசாரிக்க விழைவோரின் சிந்தனையில் ஒரு ஹார்லிக்ஸ் போத்தல் வாங்கி கொடுப்பது என்பது முதல் கடமையாக மாறி விடுகிறது. அந்தளவுக்கு ஆழமாக அது சிந்தனையில் ஊறிவிட்டது.  சந்தையாக்கும் பணியில் இருந்த அந்த இருவரையும் கிளாக்சோ (தற்போது ஜி.எஸ்.கே) நிறுவனம் அழைத்துப் பேசி செய் முறையை தங்களுக்கு தருமாறு கேட்டது. ஜேம்ஸ் மற்றும் வில்லியம் ஹார்லிக் ஏற்றுக் கொண்டு வர்த்தக ஒப்பந்தம் செயல்படுத்தப் பட்டது. அன்று துவங்கி இன்று வரை வெவ்வேறு பரிமாணங்களில் வெவ்வேறு நாடுகளில் ஹார் லிக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் பன்னாட்டு நிறுவனமான யுனி லீவரும் மற்றைய நாடுகளில் கிளாக்சோ நிறு வனமே விற்பனை உரிமையை வைத்துள்ளன.
விற்பனை யுக்திகள்-  மாறும் விளம்பரங்கள் 
உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது, அனைத்துப் பொருட்களுக்கும் விளம்பரம் என்பது மிக அடிப்படையாகும். எதைச் சொன் னால் வாங்குவோரின் கவனத்தை ஈர்க்கும் என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கேற்ப கவர்ந்திழுக்கும் சொல்லாடல் கள், உரையாடல், எளிமையான, ஆனால் சிந்தனையில் மேலோங்கி இருக்க வைக்க பெரும் யுத்திகளை அவ்வப்போது வர்த்தக நிறுவனங்கள் செய்து கொண்டே இருக்கும். எதை சொன்னால் மேலும் விற்பனை அதி கரிக்கும், இருப்பதை எப்படி தக்க வைக்க முடியும் என்பதை யோசித்தே விளம்பரங்களை உருவாக்குவார்கள். உதாரணமாக மற்ற நாடுகளில் அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் ஹார்லிக்ஸ் இரவு உறங்கப் போகும் முன் உட்கொள்ளவேண்டிய பானம் என சொல்லப் படுகிறது. ஆனால் இந்தியாவில் காலை எழுந்தவுடன் ஹார்லிக்ஸ் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் “நான் அப்படியே சாப்பிடுவேன்” (அதாவது பால் கலக்காமல்) என்று விளம்பரப்படுத்தப்பட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை.  இந்தியாவிற்கு ஹார்லிக்ஸ் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களால் அறிமுகம் செய்யப் பட்டது. அப்படி வந்த இந்த உணவுப்பொருள் இன்று ஆண்டுக்கு சுமார் 3000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. (இந்தியாவில் மட்டும்).
மாறும் வியாபார யுக்திகள் 
ஒரு உணவு பொருளின் விற்பனையை அதிகப்படுத்துவது, இருக்கும் விற்பனையை தக்க வைப்பது எளிதான காரியமல்ல. அதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் செலவழிக்கும் தொகைகள் கோடிகளில் இருக்கும். வெளித் தோற்றம், போத்தலின் வடிவம், புதுப்புது சுவை கள், பல்வேறு வயதினருக்கான தேவை, இளம் வயதினரை கவர்ந்திழுக்கும் விளம்பரம், புதுவகைகள் என பலவற்றை உள்ளடக்கியே இருக்கும். அப்படித்தான் ஹார்லிக்ஸ் எனும் பெயரில் இன்று ஓட்ஸ், பிஸ்கெட், நூடுல்ஸ், மதர்ஸ் ஹார்லிக்ஸ், ஜூனியர் ஹார்லிக்ஸ், நீரழிவு நோயாளிகளுக்கான ஹார்லிக்ஸ், புரதச் சத்து ஹார்லிக்ஸ் என நீளும் பட்டியலில் இன்று “சிறு தானிய ஹார்லிக்ஸ்” வந்துள்ளது. உணவுப் பொருட்களின் அதுவும் அன்றாட பயன்பாட்டில் இருப்பதாக மாற்றப்பட்டிருக்கும் ஒரு பானத்தை எந்த வடிவதிலாவது தொடர்ந்து மக்கள் பயன்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பதே வர்த்தகச் சூதாட்டம். அதுவும் கொள்ளை லாபமீட்டும் பொருளாக இருந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு சிறு இடத்தை கூட விடாது. இட்டு நிரப்பி கொண்டே இருக்கும். அதன் ஒரு வடிவமே இன்று சிறு தானிய ஹார்லிக்ஸ்.
உள்ளடக்கம் ஒன்று தான் ஆனால் உலகுக்குச்சொல்வதோ 
எது தனக்கு அதிக லாபமீட்டித் தருகிறதோ அப்பொருளின் வர்த்தகத்தை நிலத்தின் தன்மைக்கேற்ப பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றும். இது அவர்களுக்கு கைவந்த வியா பாரக் கலை. அதற்கு தொடர்ச்சியாக பலியாகி கொண்டிருப்பவர்கள் நாமே. இந்தோனேசியா வில் மிட்டாயாக விற்கப்படும் ஹார்லிக்ஸ், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் இதை தினசரி பருகினால் “உயரமாக, பலமாக, புத்தி கூர்மையாக” வளரலாம் என சொல்கிறது. ஆனால் ஹாங்காங்கில் குளிர்ந்த பாலில் இதை கலந்து குடித்தால் நீண்ட நேரத்திற்கு சக்தியை யும், ஆரோக்கியத்தையும் தருகிறது என விளம்பரம் செய்கிறது.  தென் ஆப்பிரிக்காவில் ஹார்லிக்ஸ் ஜுஸ் கடைகளில் விற்கப்படும் மில்க் ஷேக் எனப் படும் பானத்தில், வெவ்வேறு சுவைகளில் குடித்தல் இன்பமூட்டும் உற்சாக பானம் என வியாபாரம் செய்கிறது.  தொடர்ச்சியாக நம் மூளையைச் சலவை செய்யும் வேலையை யுனிலீவர் செய்கிறது? இதற்கு மட்டுமா செய்கி றது. இவர்களுடைய இன்னொரு சாக்லேட் சுவையிலான “பூஸ்ட்”. கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, விராட் கோலி என பெரும் பட்டாளமே இந்த பானத்தின் விளம்பர தூது வர்கள். முதலில் ஆண்களை குறி வைத்து இது பேசியது. இப்போது பெண்களையும் குறிப்பாக விளையாட்டு வீராங் கனைகளை மையமாக வைத்து வியாபாரச் சுரண்டலை நடத்தி வருகிறது. கட்டுப்பாடே இல்லாத களம். இவர்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?  உதாரணமாக ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் புத்திக் கூர்மை யாக மாறும் எனும் விளம்பரம்…எப்படி சாத்தியம்..புத்தி கூர்மை என்பதை எதை வைத்து மதிப்பிடுவது? அதற்கு என்ன அளவுகோல்? அறிவியல்ப்பூர்வமாக இருக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு விசயத்தை ஒரு விளம்பரம் அப்பட்டமாக மறுதலிக்கிறதே? இது மூட நம்பிக்கையின் உச்சமல்லவா? உயரமாவது மரபணு சார்ந்தது என எல்லோருக்கும் தெரியும்… ஆனால், ஹார்லிக்ஸ் எப்படி விளம்பரம் செய்கிறது? தவறு என தெரிந்தும் விற்பனை குறையாமல் இருக்க மக்களாகிய நாம் வாங்கிக் கொண்டே இருக்கிறோமே? முரணாக இருக்கிறதே.  ஆக ஒன்று உறுதியாகத் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட ஒரு பெரும் மக்கள் தொகையை இதை வாங்கிப் பயன் படுத்துவதற்கு அடிமையாக்கி விட்டார்கள். இதை உடைப்பது மிகவும் சிரமம் தான்.
உணவு மாற்றங்கள்
பல பத்தாண்டுகளாக இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டு, துரித உணவுக் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது.. இதனால் தொற்றா நோய்களின் (NON COMMUNICABLE DISORDERS) பரவல் வேகமாகி வருகிறது. இளவயது மாரடைப்பு, நீரழிவு, என பல நோய்கள் அதிகரித்து வரும் நிலை. இந்தியா முழுவதும் சிறு தானியங்கள் அதன் நன்மைகள், பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதையும் வர்த்தகமாக்கி லாபம் ஈட்ட தானே, பன்னாட்டு நிறுவனங்கள் நினைக்கும். அதன் வடிவமே சிறுதானியம் கலந்த ஹார்லிக்ஸ்..  ஒவ்வொரு தனிமனிதனையும் சந்தையாக நினைக்கிறது முதலாளித்துவம்.. அந்தச் சந்தையை விரிவுபடுத்த, சூறை யாட பன்னாட்டு நிறுவனங்கள் வெவ்வேறு உத்திகளை பயன்படுத்துகின்றன. அதில் யுனிலீவர் மேற்கண்ட வழியை பின்பற்றுகிறது. கற்பனைக்கு கூட ஒவ்வாத விளம்பரங்கள், தலைகீழ் மாற்றங்களை காணலாம் என்பதை போன்ற மாயத்தோற்றங்கள், என எல்லாவற்றிலும் இவர்கள் செய்யும் விதி மீறலை கண்டு கொள்வாரில்லை. கட்டுப்பாடு மற்றும் வரையறை என்பதே இல்லாமல் காட்டாறு போல இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இது போன்ற கட்டுப்பாடு இல்லாத வர்த்தக சுதந்திரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அவர்களின் அனைத்து தயாரிப்புகளும் மோசம் என்றோ, தரமற்றது என்றோ வாதிட வில்லை. கேழ்வரகும், தினையும் ஹார்லிக்சில் சேர்த்தால் என்ன கூடுதல் நன்மை கிடைத்து விட போகிறது? பொது வாக பொது புத்தியில் திட உணவு சாப்பிட முடியாத நேரத்தில் இந்த கரைசலை கொடுப்பது என்பது ஓரளவுக்கு தேவையை ஈடு கட்டும் என நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது. இதை தான் யுனிலீவர் மேலும் அழுத்தமாக வேரூன்றச் செய்ய நினைக்கிறது.  நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகத் தான் இது போன்ற பொருட்களின் விற்பனையும் அதை தக்க வைக்க நிறு வனங்கள் எடுக்கும் நடவடிக்கைகளையும் நாம் அணுக வேண்டும். பொருளாதாரத்தில் வறிய நிலையில் இருப் போரைக்கூட இது விட்டு வைக்கவில்லை. இது போன்ற பெரும் சுரண்டலுக்கு எதிரான ஒரு தொடர் விழிப்புணர்வை நாம் செய்யாமல் விட்டால் வரும் தலைமுறை மேலும் பல அபாயங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

;