புதுதில்லி:
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு ஏற்படும் பராமரிப்புக்கான செலவுகள், பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர் வசதிகளின் எதிர்பார்ப்புகளை சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி பணம் எடுப்பதற் கான பரிவர்த்தனைக் கட்டணம் ரூ. 20-இல்இருந்து ரூ. 21 ஆகவும், இதேபோல வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைக் கட்டணம்- நிதி பரிவர்த்தனைக்கு ரூ. 15-இல்இருந்து ரூ. 17 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ. 5-இல் இருந்து ரூ. 6 ஆகவும் உயர்கிறது.
இந்த நடைமுறை 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்-களில்இருந்து ஐந்துமுறை இலவச பரிவர்த்தனை (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதேபோல மெட்ரோமையங்களில் மற்ற வங்கி ஏடிஎம்-களிலிருந்து மூன்றுமுறையும், மெட்ரோ அல்லாத மையங்களிலிருந்து ஐந்துமுறையும் இலவச பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அது அப்படியே தொடருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.