articles

img

சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளராக முகமது சலீம் மீண்டும் தேர்வு

டாங்குனி நகரில் நடைபெற்ற  27வது மாநில மாநாட்டில் பேரெழுச்சி செங்கொடிகள் அலைமோதிய   ஹூக்ளி மாவட்டத்தில் மக்கள் வெள்ளம் - பிரம்மாண்ட பேரணியுடன்  நிறைவடைந்த மாநாடு

 மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் களத்தில்  அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநாட்டில் மாநிலச் செயலாளராக முகமது சலீம் இரண்டாவது  முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹூக்ளி மாவட்டம், டாங்குனி யில் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா நகரில் அமைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. 67 வயதான முகமது சலீம், வங்காள அரசியலின் மூத்த போராளியாகவும், சிறந்த பேச்சாளராகவும் அறியப்படுகிறார். மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் வழியாக தீவிர அரசியலில் நுழைந்த சலீம், வங்காளம், ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர். கொல்கத்தாவின் கிதர்பூரைச் சேர்ந்த இவர், 2015 முதல் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

சலீமின் அரசியல் பயணம்

எஸ்எப்ஐ ஊழியராக பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த சலீம், டிஒப்எப்ஐ அகில இந்திய பொதுச்  செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். அவரது அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்கள்: - 1990 முதல் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு - 2001-2004 வரை வங்காள அமைச்சரவையில் அங்கம் - 2004 மற்றும் 2014 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் - 1998 முதல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சலீமின் மனைவி டாக்டர் ரோசினா காதுன் ஆவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க மாநாடு

பிப்ரவரி 23 அன்று தொடங்கிய இந்த நான்கு நாள் மாநாடு,  மேற்கு வங்க அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  மூத்த தலைவர் பிமன் பாசு கொடியேற்றியதுடன் மாநாடு ஆரம்பமானது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான பிரகாஷ் காரத் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களான மாணிக் சர்க்கார், பிருந்தா காரத், சூர்யகாந்த மிஸ்ரா, எம்.ஏ.  பேபி, தபன் சென், அசோக் தாவ்லே, நிலோத்பல் பாசு, ராமச்சந்திர தோம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரம்மாண்ட நிறைவுப் பேரணி

மாநாட்டின் நிறைவுப் பேரணி பிப்ரவரி 25 அன்று டாங்குனியில் உள்ள கால்பந்து மைதானத்தில் பிரம்மாண்ட மாக நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்க விருந்த இந்த நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே  அரங்கம் மக்களால் நிரம்பி வழிந்தது.  பர்த்வான்  மற்றும் ஹவுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால், டாங்குனி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஹூக்ளி மாவட்டச் செயலாளர் தேப்பிரதா கோஷ் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், பிரகாஷ் காரத், முகமது சலீம், தேப்லினா ஹேம்ப்ராம், மீனாட்சி முகர்ஜி ஆகியோர் உணர்ச்சிகரமாக உரையாற்றினர்.

பத்து அம்சத் திட்டம் அங்கீகாரம்

மாநாட்டில் கட்சியை அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்தவும், மக்கள் கோரிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இயக்கத்தை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் பத்து அம்சத் திட்டம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. “ஆர்எஸ்எஸ்-பாஜக வகுப்புவாத பேரழிவையும், திரிணாமுல் காங்கிரஸின் ஜனநாயக விரோத ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்ற உறுதியான முழக்கத்துடன் மாநாடு நிறைவடைந்தது. அரசியல் - அமைப்பு அறிக்கையுடன் கூடுதலாக, “வங்காளத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது” என்பது குறித்த தனி ஆவணமும் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. மேற்கு வங்க அரசியலில் இடதுசாரி இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த  மாநாடு, வரும் நாட்களில் மாநிலத்தின் அரசியல் அரங்கில்  பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.