articles

img

பலரையும் இந்த அரசாங்கம் ஒன்றிணைத்துள்ளது ... மிக அருமை...

லட்சக்கணக்கானவர்களுக்கு நீர், மின்சாரம்ஆகியவற்றைத் துண்டிப்பதன் மூலம்கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாக்குவது, காவல்துறை, துணை ராணுவத்தின் துணையுடன் தனி பிரதேசத்திற்குள் அடைத்து வைத்துஆபத்தான சுகாதாரக் கேடான நிலைமைகளை ஏற்படுத்துவது, ஊடகவியலாளர்கள் போராட்டக்காரர்களைச் சென்றடைவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கி இருப்பதுபோன்ற செயல்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களில்பெரும்பாலும் கடுங்குளிரால் ஏற்கனவே இருநூறு பேர் இறந்து போயிருக்கின்ற நிலையில் விவசாயிகளை மேலும் தண்டிப்பதாகவே இருக்கின்றன. இதுபோன்றசெயல்பாடுகள் உலகில் வேறெங்கும் காட்டுமிராண்டித்தனமான செயலாகவே, மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படும். ஆனால் நாமும், நமது அரசாங்கமும், ஆளும் வர்க்கத்தினரும் வேறு பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துபவர்களாகவே இருக்கின்றோம். உலகிலேயே மிகப்பெரிய தேசத்தை இழிவுபடுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பயங்கரவாதிகளான ரிஹானா, கிரெட்டா தன்பெர்க் ஆகியோரின் சதியை எவ்வாறு அடித்து நொறுக்குவது என்பதுபோன்ற பிரச்சனைகளே இப்போது நமக்கு விவசாயிகளின் பிரச்சனைகளைப் புறந்தள்ளி விட்டு மிக முக்கியமானவையாக இருந்து வருகின்றன.  இது கற்பனையில் மிகவும் முட்டாள்தனமாக வேடிக்கையாக இருக்கிறது என்றாலும் உண்மையில் வெறுமனே முட்டாள்தனத்துடன் மட்டுமே உள்ளது.

அதிகபட்ச பலாத்காரம் அதிகபட்ச கொடூரம்...  
இதுபோன்ற செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்ற அதே வேளையில் நாம் ஆச்சரியப்படக்கூடாது. குறைந்தபட்ச அரசாங்கம் - அதிகபட்ச ஆளுமை என்ற முழக்கத்தைஉள்வாங்கிக் கொண்டவர்கள்கூட, இப்போது இந்த அரசாங்கம் அதிகபட்சம் பலாத்காரம் மிக்கதாக, அதிகபட்சம் கொடூரமான ஆளுமை கொண்டதாக இருப்பதைக் கண்டுபிடித்திருக்கக்கூடும். எப்போதும் பலத்த குரல்களை எழுப்பி வருகின்றவர்களின் கள்ளமௌனமே இதில் கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்கள் அதிகாரத்தைப் பாதுகாக்க ஒருபோதும் தவறாதவர்களாக, இவ்வாறான சட்டங்கள் அனைத்தையும் உற்சாகப்படுத்துவதுடன் வரவேற்கின்றவர்களாக இருப்பவர்கள். இப்போது அன்றாடம் நடைபெற்று வரும் ஜனநாயகத்தை உதறித் தள்ளி வருகின்ற நடவடிக்கைகளை அவர்கள்கூட ஏற்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.      

நடந்து வருகின்ற விவசாயிகளின் போராட்டம் குறித்த முடிவை எட்டுவதற்கு குறுக்கே எது இருக்கிறது என்பதை மத்திய அமைச்சரவையில் இருக்கின்ற எந்தவொரு அமைச்சரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவசரச் சட்டங்களாக அறிவிக்கப்படப் போவதாக அறிந்த நாளிலிருந்தே அதை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் கேட்டுவருகிறார்கள் என்பதும், மூன்று வேளாண் சட்டங்கள்தொடர்பாக விவசாயிகளுடன் எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவே இல்லை என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆலோசனையுமில்லை விவாதமுமில்லை   
விவசாயம் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் இந்த வேளாண் சட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்களுடன் எந்தவொரு ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இந்த சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடனோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் யாருடனுமோ விவாதிக்கப்படவே இல்லை. இதுபோன்று எந்தவொரு ஆலோசனையும் யாரிடமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும், மத்திய அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும் - ஏனென்றால் ஒருபோதும் இதுகுறித்து தங்களிடமும் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த சட்டங்கள் குறித்தோ, பிற முக்கியமான பிரச்சனைகளிலோ தங்களிடம் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். தங்களுடைய தலைவர் கட்டளையிடும்போது ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளைத் திருப்பி அனுப்புவது மட்டுமே தங்களுக்கான பணி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அழிக்கமுயன்றதால் ஆளுமை அதிகரிப்பு    
இதுவரையிலும் அந்த அலைகள் அதிகாரத்தில் இருப்பவர்களை விட சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவே  தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கம் ராகேஷ் திகாயத்தை அழித்தொழித்து விட முயன்றதற்கு முன்பு இருந்ததை விட அவர் இன்று மிகப் பெரிய ஆளுமையுடன் இருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலம் ஜனவரி 25 அன்று மிகப்பெரிய விவசாயிகள் போராட்டத்தைக் கண்டது. ராஜஸ்தானிலும், கர்நாடகாவிலும் போராட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவிலே இருந்தன. பெங்களூரு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் பிற இடங்களில் டிராக்டர் பேரணிகள் நடத்ததடை விதிக்கப்பட்டது. ஹரியானாவில் பொதுக்கூட்டங்களில் முதலமைச்சரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று தோன்றும் அளவிற்கு, அந்த மாநிலத்தில் அரசாங்கம் செயல்படுவதற்குப் போராடி வருகிறது.  பஞ்சாபில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீடும் போராட்டக்காரர்களைக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது. அவர்களுடன் சேர மேலும் பலர் ஆர்வம் கொண்டுள்ளனர். சிலர் ஏற்கனவே அவ்வாறு செய்திருக்கிறார்கள். பிப்ரவரி 14 அன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைக் கண்டறிய பாஜக கடுமையாகப் போராடுகிறது. பாஜக சார்பில் வேட்பாளராக இருக்க நினைத்த பழைய விசுவாசிகளும்கூட தங்களுடைய கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் ஒருதலைமுறை இளைஞர்கள் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய எதிர்காலத்தின் மீது மிகவும் கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளன.   

விவசாயிகள், கமிஷன் முகவர்கள் போன்ற சில பாரம்பரிய எதிராளிகள் உட்பட மிகப்பெரிய அளவில் சமூகசக்திகளின் சாத்தியமற்ற ஒருங்கிணைப்பை உருவாக்கியிருப்பதே இந்த அரசாங்கத்தின் வியக்கத்தக்க சாதனையாகும். அதற்கு அப்பால் சீக்கியர்கள், ஹிந்துக்கள், முஸ்லீம்கள், ஜாட்கள், ஜாட் அல்லாதவர்கள், கப் இனத்தவர், கான் சந்தைக் கூட்டம் என்று பலரையும் இந்த அரசாங்கம் ஒன்றிணைத்துள்ளது. மிகவும் அருமை.  இது பஞ்சாப், ஹரியானா பிரச்சனை, அவர்களைத்தவிர வேறு யாரும் இந்தச் சட்டங்களால் பாதிக்கப்படவில்லை, உண்மையில் இந்தப் போராட்டம் தேவையில்லாதது என்று இந்த அமைதியான குரல்கள் இரண்டு மாதங்களாக நம்மிடம் கூறி வந்தன.   வேடிக்கை. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படாத ஒரு குழுவால் சரிபார்க்கப்பட்டபோது, பஞ்சாப்,  ஹரியானா இரண்டுமே இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவே இருந்தன. அங்கே நடப்பவை நம் அனைவருக்குமே முக்கியம் என்றே நீங்கள் நினைப்பீர்கள். ‘இவர்கள் அனைவரும் சீர்திருத்தங்களை எதிர்க்கும் பணக்கார விவசாயிகள்’ என்று முன்பு பலத்த குரலில் பேசியவர்கள் இன்னும் அதையே மிக மெல்லிய குரலில் சொல்லி வருகிறார்கள். 

ஆச்சரியம். கடந்த தேசிய மாதிரி (என்எஸ்எஸ்) கணக்கெடுப்பில் பஞ்சாபில் விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.18,059 என்றிருப்பது தெரியவந்தது. விவசாயிகளின் வீட்டில் இருக்கின்ற சராசரி நபர்களின் எண்ணிக்கை 5.24 ஆகும். எனவே மாத தனிநபர் வருமானம் சுமார் 3,450 ரூபாய் என்றே இருக்கின்றது. முறைசார் துறையில் மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்ற ஊழியரின் ஊதியத்தை விட அது மிகமிகக் குறைவானது. வியப்பு! விவசாயிகளிடம் இந்த அளவிற்கு அதிகமாக செல்வம் இருக்கிறது. இந்த விவரம் குறித்த பாதி நம்மிடம்சொல்லப்படவே இல்லை. இது தொடர்பாக ஹரியானாவின் புள்ளிவிவரங்கள் (விவசாயிகளின் வீட்டில் உள்ளவர்கள் சராசரியாக 5.9 நபர்கள்) சராசரி மாத வருமானம் ரூ.14,434, தனிநபர் சராசரி வருமானம் ரூ.2,450. மற்ற இந்திய விவசாயிகள் குறித்து இருக்கின்ற இதுபோன்ற மிகமோசமான எண்கள் நிச்சயமாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகளை பணக்காரர்கள் என்ற நிலையிலேயே வைத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக குஜராத்தில் இருக்கின்ற விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.7,926 ஆகும். அங்கே விவசாயக் குடும்பத்தில் சராசரியாக 5.2 நபர்கள் இருப்பதால், ஒரு மாத தனிநபர் வருமானம் ரூ.1,524 என்று இருக்கிறது.  விவசாயக் குடும்பத்தின் மாத வருமானத்திற்கான அகில இந்திய சராசரி ரூ.6,426 (தனிநபர் ரூ.1,300). சராசரிமாத வருமானம் குறித்த இந்தப் புள்ளிவிவரங்கள் விவசாயிகளின் அனைத்து வகையான வருமானத்தையும் உள்ளடக்கியதாகவே இருக்கின்றன. அதாவது விவசாய சாகுபடியிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தை மட்டுமல்லாது, கால்நடைகள், விவசாயம் அல்லாத வணிகம், ஊதியங்கள் மற்றும் சம்பளங்களிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தையும் உள்ளடக்கியதாகவே இந்த சராசரி மாத வருமானம் இருக்கிறது.

சீர்குலைக்கும் குறுக்கீடுகள் 
70ஆவது தேசிய மாதிரி கணக்கெடுப்பில் ‘இந்தியாவில் விவசாய குடும்பங்களின் நிலைமைகளின் முக்கிய குறிகாட்டிகள்’ (2013) என்ற அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய விவசாயிகளின் நிலைமை இது தான். அடுத்த பன்னிரண்டு மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இந்த கடினமான பணிக்கு இடையில் ரிஹானாக்கள், தன்பெர்க்குகளால் மேற்கொள்ளப்படுகின்ற இதுபோன்ற‘சீர்குலைக்கும் குறுக்கீடுகள்’ மிகவும் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன.

தில்லி எல்லைகளில் கூடியிருக்கும் இந்த பணக்கார விவசாயிகள், இரண்டு டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும்குறைவான வெப்பநிலையில் டிராக்டர்களில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். திறந்த வெளியில் 5-6 டிகிரியில் அவர்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள் - நிச்சயமாக இந்திய பணக்காரர்கள் குறித்து என்னிடமிருந்த மதிப்பீடுகளை இவர்கள் அதிகரிக்க செய்திருக்கின்றனர். நாம் நினைத்ததை விட தைரியசாலிகளாகவே இவர்கள் இருக்கின்றனர்.  

தனக்குள்ளேயே ஒத்திசைவாக பேசமுடியாத குழு...
இதற்கிடையில், விவசாயிகளுடன் பேசுவதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, தனக்குள்ளேயே ஒத்திசைவாகப் பேசிக் கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது - அதன் நான்கு உறுப்பினர்களில் ஒருவர் அந்தக் குழுவின் முதல் கூட்டத்திற்கு முன்பாகவே விலகிவிட்டார். போராட்டக்காரர்களுடன் பேசுவதைப் பொறுத்தவரை, அது நடக்கவே இல்லை. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அந்தக் குழு மார்ச் 12 அன்று தனக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு மாத கால (விவசாயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சி மகரந்தச் சேர்க்கையாளர்களின் அதிகபட்ச ஆயுட்காலம்) அவகாசத்தை தீர்த்துக் கொண்டிருக்கும். அப்போது தான் பேசாத நபர்கள் குறித்த நீண்ட பட்டியலும், அந்தக் குழுவுடன் பேசாதவர்களின் நீண்ட பட்டியலும் அந்தக் குழுவிடம் நிச்சயம் இருக்கும். ஒருவேளை அதனிடம் ஒருபோதும் தாங்கள் பேசியிருக்கவே கூடாதவர்களின் சிறிய பட்டியலும்இருக்கக்கூடும்.   

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளைக் கொடுமைப்படுத்துவது, அச்சுறுத்துவது என்று எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு முயற்சியும் இதுவரையிலும் அவர்களுடைய எண்ணிக்கை பெருகி அதிகரிப்பதையே கண்டிருக்கிறது. விவசாயிகளை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்பாடுகள் அரசாங்கத்தால் சிறைப்பிடித்துவைக்கப்பட்டுள்ள ஊடகங்களில் பெரிய அளவிற்கானஇடத்தைப் பெற்றுள்ள போதிலும், அந்த செயல்பாடுகள்போராட்டக்களத்தில் தலைகீழ் நிலைமையே அடைந்துள்ளன. ஆனாலும் மேலும் மேலும் சர்வாதிகாரத்துடன், நேரடிமிருகத்தனமான தாக்குதலுக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதில் இருந்து இந்த அரசாங்கத்தை எந்த வகையிலும் அந்த நிலைமையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது மிகவும் மோசமாகவே இருக்கிறது.

தடையாக இருப்பது எது?  
இந்த சர்ச்சையில் தீர்க்கமுடியாத தடையாக தனிப்பட்ட ஈகோ இருக்கிறது  என்று கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள பலருக்கும் தெரியும். பாஜகவில் உள்ள பலருக்கு இன்னும்நன்றாகவே தெரியும். நிச்சயமாக இந்த நிலைமைக்குஅரசாங்கத்தின் கொள்கை காரணமாக இருக்கவில்லை.பணக்கார நிறுவனங்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக்கூட நாம் காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை (ஒரு நாள் அந்த வாக்குறுதிகள் உறுதியாக கவனிக்கப்படும் என்பதால்). சட்டங்களுக்கான புனிதத்தன்மையும் காரணமாக இல்லை (சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய முடியும் என்று அரசாங்கமே ஒப்புதல் வழங்கியுள்ளது). அதற்கு மன்னர் எந்த தவறும் செய்ய மாட்டார்; ஒருதவறை ஒப்புக்கொள்வது, அதனினும் மோசமாக அதிலிருந்து பின்வாங்குவது என்பவை சிந்திக்கவே முடியாதவை என்ற காரணம் மட்டுமே இருக்கிறது. ஆக இந்த நாட்டில்உள்ள ஒவ்வொரு விவசாயியும் அந்நியப்பட்டுப் போனாலும் பரவாயில்லை – தலைவர் நிச்சயம் தவறாக இருக்க மாட்டார், அவரால் தன்னுடைய கௌரவத்தை இழந்து நிற்கமுடியாது என்பது போன்றவையே காரணமாக இருக்கின்றன. இதுவே உண்மை என்று நன்கு அறிந்திருந்தாலும், இது பற்றி கிசுகிசுத்துக்கூட ஒரு தலையங்கத்தை பெரிய நாளிதழ்களில் என்னால் காண முடியவில்லை.    

இப்போதைய குழப்பத்தில் இந்த ஈகோ எந்த அளவிற்கு முக்கியமானது? இணையசேவை நிறுத்தங்கள் தொடர்பாக ரிதம் மற்றும் ப்ளூஸ் நட்சத்திரம் ஒருவரின் ‘நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை?’ என்ற எளிய ட்வீட்டுக்கான எதிர்வினைகளைக் கவனியுங்கள். இந்த விவகாரம் குறித்து எழுந்துள்ள விவாதம் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் காமிகேஸ் பயங்கரவாத எதிர்ப்பு வீரர்களை வழிநடத்தும் அளவிற்கு  வந்து, தேசபக்திகொண்ட படையணியினர் தங்களுடைய இணைய தாக்குதலை நடத்த தூண்டியிருக்கிறது.

அண்டம் அளாவிய சதி? 
இவர்களைப் புண்படுத்திய அந்த ட்வீட், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர், தகவல் தொடர்பு இயக்குனர் ஆகிய இருவரும் வெளியிட்ட அறிக்கைகளைப் போல வேளாண் சட்டங்களைப் பகிரங்கமாகப் பாராட்டுவதாக இருக்காமல், நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை என்று ஆச்சரியப்படுவதைத் தவிர வெளிப்படையான நிலைப்பாடு அல்லது சார்பு நிலை எதையும் எடுப்பதாக இருக்கவில்லை (‘பாதுகாப்பு வலைகள்’ பற்றி ‘எச்சரிக்கைகள்’ என்று சேர்க்கும் போது - நிகோடின் விற்பனையாளர்கள்கூட மிகவும் நேர்மையுடன் சட்டரீதியான எச்சரிக்கைகளில் தங்களுடைய சிகரெட் பாக்கெட்டுகளின் மீது முத்திரையைக் குத்துகிறார்கள்).   இங்கே மிகவும் ஆபத்தானவர்களாக, உறுதியாக சமரசமற்று கையாளப்பட வேண்டியவர்களாக ரிதம் மற்றும் ப்ளூஸ் கலைஞரும், பள்ளி மாணவியான பதினெட்டு வயதுகாலநிலை ஆர்வலரும் இருக்கிறார்கள். தில்லி காவல்துறையினர் பணியில் இருப்பதை அறிவது அதை உறுதிப்படுத்துவதாக  இருக்கிறது. இந்த சதித்திட்டத்திற்கான கூடுதல் பரிமாணத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் உலகளாவிய சதித்திட்டத்திற்கும் அப்பால் - இன்று உலகம், நாளை இந்த அண்டம் - என்று நகர்ந்தால் அவர்களைக் கேலி செய்பவர்களில் ஒருவனாக நான் நிச்சயம் இருக்க மாட்டேன்.‘நம்மைத் தனியாக விட்டுவிட்டு நம்முடன் தொடர்பில்லாமல் இருப்பதே பூமிப்பரப்புக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவு இருப்பதற்கான உறுதியான ஆதாரம்’ என்ற இணையம் குறித்த எனக்குப் பிடித்தமான கூற்று இருக்கிறது.     

நன்றி: தி வயர் இணைய இதழ்,

தமிழில்: தா.சந்திரகுரு

2021 பிப்ரவரி 05

;