articles

img

மகத்தான மக்கள் தலைவர் தோழர் சுர்ஜித்....

வீரத்தின் விளைநிலமான பஞ்சாப் மாநிலம், லாலாலஜபதிராய், மகாகவி இக்பால், மாவீரன் பகத்சிங் என எண்ணற்றதலைவர்களை, புரட்சியாளர்களை தந்தது.மகத்தான மக்கள் தலைவர் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தையும் கொடுத்தது.நாட்டின் சுதந்திரத்திற்காக உழைப்பாளி மக்களின் விடுதலைக்காகவும் கடந்த 72 ஆண்டுகள் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட புரட்சியாளரே தோழர் சுர்ஜித். இவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்திலுள்ள ரூபோலால் என்ற கிராமத்தில் ஹர்னாம்சிங்-கோர்பச்சன் தம்பதிக்கு புதல்வராக 1916 -ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதியன்று பிறந்தார்.

சுர்ஜித்தின் தந்தை ஹர்னாம் சிங் முதல் உலகப்போர் காலம் வரை ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றி பிறகு தன்னை தேசிய விடுதலை இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர்.அன்று காங்கிரஸ் பேரியக்கத்தை போல் நாட்டின் விடுதலைக்காக போராடிய பஞ்சாப்பின் அகாலி இயக்கத்தில் செயல்பட்டவர். இவர்கள் அமெரிக்காவில் கதார்கட்சிஎன்ற ஒரு கட்சியையும் துவக்கி நடத்தி வந்தனர்.ஹர்னம் சிங் ஏராளமான போராட்டத்தை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னெடுத்தார். எல்லா இடங்களிலும் சுர்ஜித்தை உடன் கூட்டிச் செல்வார். அதனால்பாலகன் சுர்ஜித்துக்கு 7 வயதிலேயே சுதந்திரவேட்கை உருவானது. பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த சுர்ஜித் தந்தையார் 1924-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2 ஆண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டார். சுர்ஜித் குடும்பம் கடும் வறுமையில் வாடியது. சுர்ஜித்தின் தாயார் கோர்பச்சன் கடுமையாக உழைத்து குடும்பத்தை காப்பாற்றினார்.

பகத்சிங்கின் இயக்கத்தில் 
ஜலந்தரில் உள்ள தோபா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கடுமையான வறுமைக்கு நடுவில் கல்வி கற்றார். அங்கு அடிக்கடி பொதுக்கூட்டம் நடைபெறும். பள்ளியின் கட்டுப்பாட்டை மீறி பள்ளியில் யாருக்கும் தெரியாமல் பொதுக்கூட்டத்திற்கு சென்று விடுவார். அகாலி, காங்கிரஸ் தலைவர்கள் உரையை உன்னிப்பாக கவனித்து வந்தார்.இந்த சமயத்தில்தான் புரட்சி வீரர் பகத்சிங்மீது பற்றுகொண்டு அவர் தாக்கத்திற்கு ஆளானார். அதன் விளைவாக பகத்சிங் துவக்கியிருந்த நவஜவான் பாரத் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அச்சமயம்அவருக்கு 14 வயது. இவ்வியக்கத்தின் பொதுச்செயலாளரான பகத்சிங், சுர்ஜித்திற்கு கதாநாயகனாக விளங்கினார். ஆனால் 1931 -ஆம்ஆண்டு பகத்சிங், சிறை பிடிக்கப்பட்டு, மார்ச் 23ல் அவரும் அவருடைய சகாக்களும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டது சுர்ஜித்தை வேதனையில் ஆழ்த்தியது. 1932 ல் சுர்ஜித் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார். அருகிலுள்ள நகரமான ஹோசியார்பூர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டார். அங்கு பகத்சிங் முதலாம் ஆண்டுஅஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் அந்த நகருக்கு மாநில ஆளுநர் வருவதாக இருந்தது. அதை அறிந்த காங்கிரசார் அதே நாளில் மாவட்ட மாஜிஸ்டிரேட் அலுவலகத்தின் உச்சியில் பறக்கும் யூனியன் ஜாக்கொடியை இறக்கி விட்டு மூவர்ணக் கொடியைஏற்றுவது என்று திட்டமிட்டார்கள். அதை அறிந்த ஆங்கிலேய அரசு அலுவலகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை துப்பாக்கியோடு நிறுத்தியது. மதியம் வரை கொடியை ஏற்றுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. நேராக காங்கிரஸ் அலுவலகம் சென்ற சுர்ஜித் அங்கிருந்தவர்களோடு சண்டை போட்டார். அறிவித்து விட்டால் பின்வாங்கக் கூடாது என்றார். நேராக அங்கு சென்று யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் திடீ
ரென கொடிமரத்தில் ஏறி யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதை கண்ட ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுர்ஜித் கொடியின் பீடத்திற்குபின்பு ஒளிந்து கொண்டார். 

லண்டனை உடைக்கும் சிங்
மேலே இருப்பது சிறுவன் என்பதை கண்டராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தி சிறுவன் சுர்ஜித்தை கீழே இறக்கி கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். உன் பெயர் என்ன என்று நீதிபதி கேட்டார். அவர்தன் பெயரைக் கூறாமல் “லண்டன் தோட்சிங்”(லண்டனை உடைக்கும் சிங்) என கூறினார்.மேலும் பகத்சிங்கை புகழ்ந்து பேசினார். நீதிபதியோ ஓராண்டு சிறை என அறிவித்தார். ஓராண்டு மட்டும் தானா என நீதிபதியை பார்த்துக் கேட்டார் சுர்ஜித். நீ சிறுவன் என்பதால் குறிப்பிட்ட சட்டத்தில் ஓராண்டு தான் சிறை என்றார் நீதிபதி.சுர்ஜித்தின் இந்த துணிச்சலான செயல் பஞ்சாப் மாநிலம் முழுவம் பரவியது. லாகூர் சிறுவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு பகத்சிங்கின் சக  தோழர்கள் பலர் இருந்தார்கள். அங்கு கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். சிறையில் இருந்த, காங்கிரஸ் தலைவர்களோடு தொடர்பு ஏற்பட்டது. ஓராண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வரும்போது சுர்ஜித்திற்கு வயது 15.

முதல் கிளை உருவாக்கம்
சிறையிலிருந்து வந்த சுர்ஜித் காங்கிரஸ் கட்சியின் ஊழியராக செயல்பட்டார். வெகுவிரைவில் காங்கிரஸ் கட்சியின் ஜலந்தர் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். அதே ஆண்டில் முதல் முறையாக கம்யூனிஸ்ட்டுகளோடு தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிசத் தத்துவங்களை கேட்டறிந்த சுர்ஜித் அதனால் ஈர்க்கப்பட்டு 1934-ஆம் ஆண்டு 20 பேர் கொண்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை ஜலந்தரில் உருவாக்கினார். காங்கிரஸ்கட்சியில் இருந்து கொண்டே கம்யூனிஸ்டாக செயல்படலானார்.
1936 -ஆம் ஆண்டில் லக்னோவில் அகிலஇந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை உருவாக்கவும்,பலப்படுத்தவும் சுர்ஜித் மிகவும் பாடுபட்டார்.அன்று தொடங்கிய விவசாய சங்கத்துடனான அவருடைய தொடர்பு வாழ்நாள் முழுவதும் நீடித்தது.1938 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில விவசாய சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்படச் செயலாற்றினார்.சுர்ஜித் குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிரிதம்கவுர் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்கனவே பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த சுர்ஜித்தை கைது செய்து சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. பல மாதங்களுக்கு பிறகு விடுதலையானார். சுர்ஜித் - பிரிதம் கவுருக்கு இரண்டு புதல்வர்கள், இரண்டு புதல்விகள் பிறந்தனர். 72 ஆண்டுகாலம் தோழர் சுர்ஜித்தின் பொது வாழ்க்கைக்கு பெரிதும் துணையாக விளங்கினார் பிரிதம் கவுர்.

இருட்டுச் சிறையில்....
1930-39 -ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் உலகப்போரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் நடத்தி வந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு கம்யூனிஸ்ட் தலைவர்களை கைது செய்தது. சுர்ஜித்தை பஞ்சாப்பை விட்டு வெளியேற உத்தரவிட்டது. தொடர்ந்து தலைமறைவாக கட்சி பணியாற்றி வந்த சுர்ஜித் அமிர்தசரஸ் ரயில்நிலையத்தில் கைது செய்யப்பட்டு கொடுமைக்கும் சித்ரவதைக்கும் பெயர் போன லாகூர் சிறையில் - டார்க் செல்லில் வெளிச்சம் இல்லாத இருட்டு அறையில் அடைக்கப்பட்டார். அங்கு மலமும், சிறுநீரும் எடுக்கப்பட மாட்டாது. வாரத்திற்கு ஒரு பானை தண்ணீர் தான் தரப்படும் அதை வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உணவை ஒரு துவாரத்தின் வழியே எறிந்து விடுவார்கள். அந்த சிறையில் தான் சுர்ஜித் 3 மாத காலம்அடைக்கப்பட்டிருந்தார். 

அப்போது அயர்லாந்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். இருட்டிலேயே இருந்ததால் தோழருக்கு கண் பார்வைபாதிப்படைந்தது. உடம்பு பூராவும் ஈரும் பேனாகவும், பூச்சியுமாக இருந்தது. எனவே மருத்துவர் உடல் நலமாக இருக்கிறது என சான்றளிக்க மறுத்துவிட்டார். அதனால் தண்டனை கைதிகள் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். பிறகு தியோலா (ராஜஸ்தான்) சிறைக்கு மாற்றப்பட்டார். இரண்டாம் யுத்த காலத்தில் பிடிக்கப்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட்காரர்கள் அந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அந்த சிறையில் தோழர்இஎம்எஸ், பிடிஆர், எஸ்வி, காட்டே, அஜாய் கோஷ்,ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் 1941 ஜூன் மாதம் ஜெர்மனியின் ஹிட்லர் சோவியத் யூனியனை கைப்பற்றி ஈரான் வழியாக இந்தியாவை கைப்பற்றுவது என்ற சதித் திட்டத்தை தீட்டினான். இதைஅறிந்த கம்யூனிஸ்ட்டுகள் அதை முறியடிக்கவேண்டும். அதனால் பிரிட்டிஷாருடன் சேர்ந்து போராட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது இருந்த தடை நீக்கப்பட்டு அனைவரும் 1942 ல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். சுர்ஜித் மட்டும் 1944 ல் விடுதலை செய்யப்பட்டார்.

கலவரப் பகுதியில் அமைதிப்பணியில்
1947 ஆம் ஆண்டு இந்தியா,பாகிஸ்தான் என்று பிளவுபட்ட போது மிகப் பெரிய மதக்கலவரம் வெடித்துக் கிளம்பியது. தோழர் சுர்ஜித் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும்அச்சுறுத்தலை மீறி கலவரப் பகுதியில் கிராமம்கிராமமாகச் சென்று மக்களை அமைதிப்படுத்தினார்கள்.1948-1951 கட்சிக்கு மிகவும் சோதனையான காலமாக அமைந்தது. சுர்ஜித் உள்ளிட்ட தலைவர்கள் தலைமறைவானார்கள். கட்சி சார்பில் சோவியத் சென்ற தூதுக்குழு ஒரு வரைவு திட்டத்தை தயார் செய்தது. அது கட்சியை ஒற்றுமைப்படுத்த உதவியது. சிறையிலிருந்த ஏ.கே. கோபாலன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விடுதலையானார். அதை தொடர்ந்து கர்ஜித்தின் நான்கு ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 ஆவது மாநாடு 1953 ல் மதுரையில் நடந்தது. அதில்சுர்ஜித் முதல் முறையாக அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 1956, 1958,1961-ல் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் கருத்து வேறுபாடு தொடர்ந்தது. இந்நிலையில் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டது.110 பேர் கொண்ட தேசியக் கவுன்சிலில் 32 பேர்வெளியேறி, தாங்கள் தான் உண்மையானகம்யூனிஸ்ட்டுகள் என பிரகடனப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து கட்சியின் 7 ஆவதுமாநாடு 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-7 தேதிகளில் நடந்தது. அதில் சுர்ஜித்உள்ளிட்ட புதிய மத்தியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பி.சுந்தரய்யா பொதுச்செயலாளராகவும் அவருடன் சேர்ந்து சுர்ஜித், ஏ.கே.கோபாலன், பிரமோதாஸ் குப்தா, ஜோதிபாசு, எம். பசவபுன்னையா, பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகிய ஒன்பது பேர்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நவரத்தினங்கள் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தானதலைவர்களாக விளங்கினார்கள்.

பிரிவினைவாதிகளுக்கு எதிராக
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கெதிராக தோழர் சுர்ஜித்நடத்திய போராட்டம் மகத்தானது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் சுர்ஜித் பெயர் இருந்தது. தன் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல் பயங்கரவாதிகளுக்கெதிராக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாலிபர் சங்கம் மற்றும் கட்சித் தோழர்கள் 150 பேர் இக்காலத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியதால் பல இழப்புகளை சந்தித்தது கட்சி.1964-ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த சுர்ஜித்1992-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த கட்சியின் 14 ஆவது மாநாட்டில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 -ஆம் ஆண்டு வரை12 ஆண்டு காலம் அந்த பொறுப்பில் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமையை இந்திய அரசியல் அரங்கில் இந்துத்துவா மதவெறிக்கெதிராக நாட்டு மக்களை ஒன்றுதிரட்டுவதிலும் அவர்ஆற்றிய பங்கு அளப்பரியது.தோழர் சுர்ஜித் உடல்நலம் குன்றி 2008 ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி தனது 92 வது வயதில் காலமானார். தோழர் சுர்ஜித்தின் வாழ்வும், அரசியல் பணியும் இந்திய இளைஞர்களுக்கு என்றும் உற்சாகமூட்டும்.

கட்டுரையாளர் : ஆர்.ராஜா, மாநகர்  மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்), திருச்சி.

;