articles

img

எல்லோருக்குமான தேசம் எனும் முழக்கமே காலத்தின் கட்டாயம்....

“அகிம்சையை மட்டுமே போதிக்கும் காந்தி போன்ற ஒரு மனிதரைகூட கொல்லும் மனநிலை உங்களுக்கு இருக்கிறதே, என்ன கொடுமை. காந்தி போன்ற அஹிம்சாவதியைக் கூட கொன்றுவிட்டுத் ஒருவன் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது”காந்தியை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நீதிபதி ஆத்மசரண்  வழங்கிய தீர்ப்பில் உள்ளதே மேற்கண்ட வாசகம். பொக்கைவாய் கொண்டு சிரிக்கும் அந்த கிழவனை சுட்டுக் கொல்லும் மனநிலை யாருக்காவது வருமா?. தன் மனம் முழுக்க வன்மத்தாலும் வெறுப்பு மனநிலையிலும் ஊறிப்போன கேவலமான நபர்களுக்குத்தான் இப்படியொரு சிந்தனை வரும். இங்கு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை, காந்தியின் மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், தேசத்தின் விடியலுக்காக உழைத்தவர் என்ற மரியாதையும் அன்பும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விமர்சனத்தை வைப்பவர்கள்கூட இந்திய தேசத்தின் விடியலுக்காக அவர் நேர்மையோடு போராடியதை எப்போதும்   மறுத்ததில்லை. பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞர் தொழில் மூலம் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம், ஆனாலும் அவர் பொது வாழ்க்கையைத்தான் தேர்ந்தெடுத்தார்.

கோட்சேயை கொண்டாடுபவர்கள் 
1948 ஜனவரி 30ல் அவரை கொலை செய்து தங்கள் வெறியை தீர்த்துக்கொண்டவர்கள் எழுபது ஆண்டுகளுக்கு பிறகு இன்னமும் தீராத வன்மமாய் இருப்பதை கடந்தாண்டு அவரின் உருவ பொம் மையை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தெருவில் வைத்து ஒரு பெண் சாமியார் தலைமையில் மீண்டும் சுட்டு தங்கள்  வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். அப்போது அவரைச் சுற்றி நின்றவர்கள் “நாதுராம் கோட்சே வாழ்க” என்று முழக்கமிட்டதையும் அப் போது அவர்கள் முகத்தில் காந்தியை கொலை செய்த பெருமை மின்னியதையும் மறந்திட முடியாது.    அவர்கள்  தெருவில் மட்டுமல்ல  இந்திய நாடாளுமன்ற மைய கட்டிடத்திலும் முழங்கினார்கள். இந்திய வரலாற்றில் அதுவும் நாடாளுமன்றத்தில் “நாதுராம் கோட்சே வாழ்க” என்ற குரல்   ஒலிக்கும் என்று ஒருபோதும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். மத்தியப் பிரதேசம் போபாலிலிருந்து தேர்வு செய்யப் பட்ட “பிரக்யாசிங்” என்ற பெண் சாமியார் நாடாளுமன்றத்தில் 2019ல் “கோட்சே வாழ்க” என்று முழக்கமிட்டார். “கோட்சே வாழ்க” என்று சொல்வதன் மூலமாக அவர்கள் “காந்தி ஒழிக” என்ற முழக்கத்தை முன்வைக்கிறார்கள். பிரக்யாசிங் “காந்தியை நாங் கள் வெறும் கிள்ளுக் கீரையாகத்தான் நினைக்கிறோம்” என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு போகிறார்.
இதையொட்டி பல விமர்சனங்கள் எழுந்த போது வேறு வழியில்லாமல்  பி.ஜே.பி தலைவர்களே “அது அவரின் சொந்தக் கருத்து, எங்கள் கருத்து அல்ல” என்று சொன்னாலும் ஒரு தேசத்தின் தலைவரை கொன்றவனை நாடாளுமன்றத்தில் கொண்டாடியதற்காக ஒப்புக்காக கூட சிறு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவர்கள் மனதில் நினைப்பதை பிரக்யாசிங் வெளிப்படையாக அறிவித்தார். அதன் தொடர்ச்சிதான்  29.11.2019 டெலிகிராப்  இதழில் 
“நாங்கள் மானசீகமாக நேசிப்பது கோட்சேவைத் தான்” என்று தெளிவாக குறிப்பிடுகிறார். இவர் வேறுயாருமில்லை. இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளி. அவர் எம்.பி ஆவதற்கு முன்புவரை சிறைக் காவலில் இருந்தவர்.

கல்வியை தலிபான்மயமாக்க 
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் 2001ல் “இந்திய கல்வியை தலிபான்மயமாக்க பார்க்கிறார்கள்” என்று ஒரு கட்டுரை எழுதுகிறார். “மத அடிப்படைவாத சிந்தனையை திணிக்கப் பார்க்கிறார்கள்,  கல்வியின் மூலம் வரலாற்றை மாற்றி மோசமான பொய்யான கல்விமுறையை  உருவாக்க பார்க்கிறார்கள், இவர்களின் இந்த நடவடிக்கை மூலம்  இந்தியாவில் மோசமான ஆபத் தான சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு திட்டமிட்டு உண்மையான வர
லாற்றை தெரியாமல் செய்யும் மோசடி வேலையை உடனே தடுக்க வேண்டும்” என்று அப்போதே எழுதினார். இன்று அது கண் முன்னால் நடக்கும் சாட்சியமாகிவிட்டது. அதற்கு உதாரணம் சமீபத்தில் குஜராத்தின் பள்ளி பாட திட்டத்தில் “காந்தி அவர்கள் 1948 ஜனவரி 30 அன்று திடீரென காலமானார் ” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதனை வாசிக்கும் மாணவர்கள் காந்தி வயதாகி அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்ற பொருளில் புரிந்துகொள்ளக்கூடும். இந்த செய்தியை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி இணையம் முழுக்க “ஆமாம் அவருக்கு ஹார்ட் அட்டாக்” வந்து இறந்துவிட்டார், “தன்னை தானே சுட்டு இறந்துவிட்டார்” அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள் என்று காட்டாமாக பதிவிட்டார்கள்.

இப்படிதான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றை திருத்தும் மோசடி  வேலையை செய்கிறார்கள். வரலாற்றை திரும்பத் திரும்பச் சொல்வதன்மூலம் உண்மையை கடத்தும் வேலை செய்யவேண்டியுள்ளது. அதனை தவற விட்டோம் என்றால் நாளை தேவையின் பொருட்டு  காந்தியை கொன் றது இவர்கள்தான் என்று யாரை வேண்டுமென்றாலும் திருப்பி விடலாம். காந்தியை கோட்சேதான் கொன்றான் என்று திரும்பத் திரும்பச் சொல்லும் காலத்தில் நிற்கிறோம். அவர்களின் பல்வேறு தகிடுதத்தத்தினால் எல்லாவற்றையும் மறக்கவும் மடைமாற்றவும் செய்கிறார்கள்.   இந்துத்துவ மனநிலை என்பது சாதாரணமானது அல்ல என்பதற்கு குஜராத் கலவரமே முக்கிய சாட்சியம். ஒரு நிறைமாத கர்ப்பிணியை அவள் ஒரு இஸ்லாமியர் என்பதற்காகவே அவளது வயிற்றை கிழித்து சிசுவை சூலாயுதம் கொண்டு வெளியே எடுத்து தீயில் வாட்டும் மனநிலையின் கொடூரம். இவர்கள் இப்படி செய்வதற்கான மனநிலை என் பது இப்படி நீங்கள் செய்வதன்மூலம் உங்களுக்கு ‘உறுதி செய்யப்பட்ட சொர்க்க வாழ்வு இருக்கிறது’ என்று தூண்டிவிட்டு இந்த கருத்து சிந்தனை வழியாக புகுத்தப்படுகிறது. தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஒரு கொடூரச் செயல் என்பதே தெரியாதபடி அவர்களின் மனம் கட்டமைக்கப்படுகிறது. 

எல்லோருக்குமான தேசம்
சுதந்திர இந்தியாவில் இந்துத்துவ மனநிலையில் செய்யப்பட்ட முதல் மததீவிரவாதச் செயல் மகாத்மா காந்தியின் படுகொலை. அவர்கள் காந்தியை கொள்வதற்கு மிக முக்கியக் காரணம் இந்த தேசம் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ, சீக்கிய மதத்தைச் சேர்ந்த எல்லோருக்குமானது என்பதை திரும்பத் திரும்பச் சொன்னதுதான். அவர்களை பொறுத்தவரை இந்த தேசம் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது; இங்கே வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதே. இது வரலாற்று உண்மை. இங்குள்ள எல்லா சமயத்தினரும் ஒருகாலத்தில் இவர்கள் சொல்லும் இந்து மதத் திலேயே இருந்தவர்கள். காலவோட்டத்தில் வேறு சமயத்தை விரும்பி மதம் மாறியவர்கள். காந்தி அந்த புரிதலுடன் தான் இந்த தேசம் எல்லோருக்குமானது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “ராமராஜ்யம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ராமராஜ்யம் என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல, அது புனிதமான கடவுள் ராஜ்ஜியம்.

என்னைப்பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்றுதான். எளிய வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசும்போது “குதாயி ராஜ்”(இறைவனின் ஆட்சி என்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பேசும் போது “கர்த்தரின் ராஜ்ஜியம்” என்றே விளக்குவேன் என்று எல்லா கடவுளும் ஒன்றுதான் என்ற பொருளில் அவர் பதிவு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த தேசமாக இந்தியா இருப்பதை அவர் எப்போதும் வழிமொழிந்தது இல்லை என்றே அவரின் பேச்சுக்கள் காட்டுகின்றன.“எல்லோருக்குமான தேசம்” என்ற காந்தியின் முழக் கம் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. தாங்கள் நினைப்பதை செய்யமுடியாமல் தடுக்கும் “தொல்லை மனிதராக” அவர் இருந்ததினால் அவரை அப்புறப்படுத்தி தங்களது செயல்திட்டத்தை முன்னெடுத்தார்கள்.

நேருவை சிறுமைப்படுத்தும் காரணம்
காந்தியின் படுகொலையை ஒருபுறம் நிகழ்த்திவிட்டு மறுபுறம் அதனை செய்தவர்கள் இஸ்லாமியர் என்ற பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார் கள். நல்ல வேலையாக நேரு சுதாரித்து உடனே வானொலி வாயிலாக உண்மையைச் சொல்லி பெரும் வன்முறை நிகழ்வை தடுத்து நிறுத்தினார். நேருவின் உடனடியான சுதாரிப்பு வினையே தீராத கோபமாய்  இருப்பதினால்தான் என்னவோ எதை செய்தாலும் அதில் நேருவை சம்பந்தமே இல்லாமல் முன்வைத்தும் சிறுமைப்படுத்தும் குறுக்குப் புத்தி இருக்கலாம். ஒருவேளை நேரு காந்தியை கொன் றது இஸ்லாமியர் என்ற பரப்புரைக்கு அவரும் பலியாகி தாமதம் செய்திருந்தால் அவர்கள் நினைத்த இன அழித்தொழிப்பு படுஜோராக நடந்து முடிந்திருக்கும். அவர்கள் ஒவ்வொரு கண்ணியையும் அப்போதிருந்தே மிகக் கவனமாக பின்னத் தொடங்கினர். கோட்சே காந்தியை கொலை செய்யும்போது அவனது வயது 37. ஆனால் காவல்துறை கைதுசெய்யும் போது தனது வயதை 25 என்று குறிப்பிடுகிறான். மிக தெளிவாக வழக்கில் பல முரண்களை ஏற்படுத்திவிட்டால் சந்தேகத்தின் பலனில் விடுதலையாகலாம் என்று அவனுக்கு ஆலோசனை சொல்லி அனுப்பப்பட்டு உள்ளான். அந்த வழக்கில் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். கோட்சேவின் மானசீக வழிகாட்டி சாவர்க்கர். சாவர்க்கரும் கோட்சேவும் நெருங்கிய நண்பர்கள். இந்த கொலை குறித்து போடப்பட்ட கமிஷன் சொன்ன வார்த்தை சாவர்க்கர் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த கொலை நடந்திருக்காது என்றது. 

சாவர்க்கர் நல்ல நடிகன்
இந்த வழக்கு முடியும்வரை சாவர்க்கர் அப்பாவி போலவே முக பாவனை வைத்திருந்ததாக அப் போது முழு வழக்கையும் பின் தொடர்ந்த பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். பின்னொருநாளில் சாவர்க்கருக்காக   ஆஜரான வழக்கறிஞர் அப்பாவிபோல முகத்தை வைத்து என்னையே ஏமாற்றி விட்டான். “அவன் ஒரு நல்ல நடிகன். இதனை நான் தெரிந்துகொள்ள எனக்கு இருபது வருடங்கள் ஆனது” என்கிறார். அந்த வழக்கில் ஒன்பதுபேர் குற்றவாளி. அதில் சாவர்க்கர் மட்டும் விடுதலையாகிறார். அதற்காகத் தான் முகத்தை அப்பாவிபோல் வைத்து  நடித் துள்ளார் என்று வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். ஒவ்வொன்றையும் மிகக் கவனமாக அவர்கள் செய்து முடித்துள்ளனர்.

காமராஜ் முதல்கர்ப்பூரி தாக்கூர் வரை 
நீதிமன்றத்தில் சாவர்க்கரை தவிர மற்ற எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அந்த பத்திரிகையாளர் பதிவு செய்கிறார். ஒரு கொலை குற்றச் சாட்டில் இருக்கிறோம் என்ற எந்த வருத்தமும் அவர் களுக்கு இல்லை என்று குறிப்பிடுகிறார். காந்தியிலிருந்து துவங்கிய அவர்களது கொலைகார ஆயுதம் இன்றுவரை பலரையும் பதம் பார்த்துவிட்டது. அவர்கள் பட்டியலில் முயற்சி செய்தும் காமராஜர் அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் தப்பித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் தாக்குதலில் அப்போதைய பிஹார் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் படுகாயம் அடைந்தார். உத்தரப்பிரதேச முதல்வர் ராம்நரேஷ் யாதவ் மீது கொலை தாக்குதல் நடத்தினார்கள். இரண்டுக்கும் காரணம் அவர்கள்      பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சி செய்தார்கள் என்பதே. இடஒதுக்கீடு அமலானால் பல உயர் பொறுப்பில் இருக்கும் பிராமணர்களுக்கு இழப்பு ஏற்படும் என்ற காரணத்தை தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது அவர்கள், பட்டியலில் கல்வியாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள், செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று  நீண்ட பட்டியல் கைவசம் வைத்துக்கொண்டு தங்களது செயல் திட்டத்தை அமல்படுத்தி வருகிறார்கள்.     கோட்சே தன்னை ஆர் எஸ் எஸ் ஊழியன் என்றும் நான் காந்தியை கொலை செய்ய துப்பாக்கி பயிற்சியை இந்து மகா சபா அலுவலகத்துக்கு பின்னால் உள்ள இடத்தில்தான் கற்றுக்கொண்டேன் என்றும் வெளிப்படையாக சொன்னவன் அவனை ஒரு தேசத்தின் நாடாளுமன்றத்தில் கொண்டாடும் இடம்நோக்கி நாம் வந்துள்ளது வெட்கக்கேடானது. அவர்கள் முன்மொழியும் இந்துத்துவ தேசம் என்பது சாதியின் பெயரால் நடத்தப்படும் வர்ணாஸ்ரம தர்மம். அந்த தர்மத்தின்படி எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடமில்லை, வர்ணாஸ்ரமப் படி  யார் யாருக்கு என்னென்ன வேலைகள் குறிப் பிடப்பட்டு உள்ளதோ அதனை மட்டுமே காலகாலமாக எல்லோரும் செய்யவேண்டும் என்ற ஒடுக்குமுறை தத்துவமே இந்துத்துவ சித்தாந்தம். 

சித்பவன பிராமணர்களின் நலனை மட்டுமே பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே, ஆர்.எஸ்.எஸ் பேச்சை மீறி அதன் சேவகர்களால்  ஒருவார்த்தையும் பேச முடியாது. எனவே ஒரு தேசத்துக்கே எதிரான சித்தாந்தத்தை முன்வைப்பவர்களுக்கு எதிராக காந்தியின் மதச் சார்பற்ற இந்தியா என்ற சித்தாந்தத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளர் :  அ.கரீம்  

ஜனவரி 30 காந்தி நினைவுநாள் 

;