articles

img

மாமன்னரின் தர்பாரும் மக்களின் துயரமும்....

அண்மையில் மாமன்னர் தனது தர்பார் அவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். 78 மந்திரிகளை கொண்டதாக அவரது அரசவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. புதிய பொலிவோடு அரண்மனையின் விரிவாக்கப்பணிகளும் இருபதாயிரம் கோடியில் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மேலே நடைபெறும் எந்தவொரு மாற்றங்களுக்கும் கீழேயுள்ள 139 கோடி மக்களின் அன்றாட வாழ்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் அவர்களின்  துயரம் வழக்கம் போல தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கைகளோ, அரண்மனைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள அகழியில் மிதக்கும் கொடிய முதலைகளாக மிதந்து கொண்டிருக்கிறது. எளிய மக்களின் குரல் எவ்வளவு உரத்து ஒலித்தாலும் நெடிதுயர்ந்த அந்த கோட்டையின் காதுகளுக்கு கேட்பதாக இல்லை. உண்மையில் இந்த தேசம் ஒன்றாக இல்லை. ஒன்றுக்குள் மற்றொன்று என இரண்டாகத்தான் இருக்கிறது. பெரும் செல்வந்தர்கள் ஒரு புறம், ஏழை மக்கள் மறுபுறம் என இரு இந்தியாவாகவும், இரண்டு இந்தியாவிற்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டும் தான் இருக்கின்றன. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அம்சங்களில் வெளிப்படும் முரண்பாடுகளை கொண்டே அவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

பேரிடர் காலத்தில் தேசம் தத்தளித்துக்கொண்டிருப்பது குறித்த எந்தவொரு சலனமும் அவர்களிடம் இல்லை. தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொடருமானால், அனைவருக்கும் இருமுறை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள 1149 நாட்கள் ஆகும். அதாவது சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகும் என ஒரு தகவலை  ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்  செய்தியாக வெளியிட்டுள்ளது.  இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் தேவைப்படும் தடுப்பூசிகள் விரைந்து அளிக்க வேண்டுமெனில் பொதுத்துறைகளில் உற்பத்திகளை துவங்க வேண்டும். பொதுத்துறைகளில் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டால் பல்லாயிரம் கோடி வணிகம் நடைபெறும் தடுப்பூசி வணிகச் சந்தையில் தனியாருக்கான லாபம் குறையும் என்பதாலும் தடுப்பூசி ஆராய்ச்சிகளுக்காக கோடி கோடியாய் தரும் பில்கேட்ஸ் – மெலிண்டா  அறக்கட்டளை போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் தனியாரைத்தான் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் ஊக்குவிக்கின்றன என்பதால் மக்கள் நலனை விட தனியாரின் நலனே முக்கியம் என்பதாக அரசின் கொள்கைகள் உள்ளன.

உலக நாடுகளிலேயே மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு நிதிஒதுக்கீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கீழிருந்து நான்காவது இடத்தில் உள்ளது.  நிதி நெருக்கடியால் கூடுதலாக இதற்கு நிதிஒதுக்கீடு செய்ய முடியாதென்பது அரசின் வாதம்.  ஆனால் உண்மை என்னவெனில் பேரிடர் காலத்தில் இந்தியாவில் உள்ள  முதல் நிலையில் உள்ள 11 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெறும் 1% கூடுதலான வரி போட்டிருந்தால் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறைக்கான அடுத்த 10 ஆண்டுகளுக்கான செலவுகளை அதன் மூலமே ஈடு கட்டியிருக்க முடியும்.  அ தேபோல  முதல் 11 நிறுவனங்களுக்குகூடுதலாக 1% வரி போட்டால் பிரதமரின் மக்கள் மருத்துவ திட்டத்திற்கு (ஜன் அவுஷதி யோஜனா) தற்போது ஒதுக்கீடு செய்வதை போல 140 மடங்கு கூடுதலாக அளித்திருக்கவும் ஏழை மக்களுக்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி நெருக்கடியில்லாமல் அமலாக்கியிருக்கவும் முடியும். ஆனால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்தவொரு சிறு அசெளகரியங்களும் வந்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் மிக கவனமாக உள்ளதாலும், அவர்களின்வர்க்க பாசத்தாலும் மக்களே சுமைகளையும், நெருக்கடிகளையும்  தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவிலுள்ள முதல் 100 பெரும் பணக்காரர்களின் நிகர லாபம் கடந்த ஓராண்டில்மட்டும் ரூ.12,97,822 கோடி அதிகரித்துள்ளது.  அதை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பதாக (ஒரு கற்பனைக்கு தான்) இருந்தால் சுமார் 14 கோடிஇந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.14,045/-  என அளிக்க முடியும். ஆனால் ஆளுக்கு பதினைந்து லட்சம் தருவதாக சொல்லி விட்டு,பிறகு நாங்கள் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை என சத்தியம் செய்பவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
கடந்த  2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை ஒரு லிட்டர் டீசலுக்கு 607.33% அளவிற்கும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு217.42% அளவிற்கும் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய கடுமையான விலை உயர்வினால் மக்கள் ஒரு புறம் கஷ்டப்படும் போதுதான், இன்னொரு புறத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி ஏற்கனவே அவர்கள் கட்டியதிலிருந்து  மேலும் 79% அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வரிக் குறைப்பினால் அவர்களின் லாபம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. 

ஒரு சாதாரண முறைசாரா உழைப்பாளி மூன்றாண்டுகளில் பெறும் ஊதியத்திற்குநிகரான லாபம் ஒரு விநாடி நேரத்திலேயே முகேஷ் அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடைத்து விடுகிறதாம். அப்படியெனில் அம்பானிக்கு ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் லாபத்தின் அளவிற்கு ஈடான ஊதியத்தை ஈட்ட வேண்டுமெனில் அந்த உழைப்பாளிபத்தாயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். இரு புறமும் உள்ள ஏற்றத்தாழ்வின் அளவை குறிப்பிட இதை விடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன? இப்படியாக தொடர்கிற பட்டியல் மூலம் ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது.

இவர்களின் பேச்சும், மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நிலையை உயர்த்துவதாக இல்லை. மாறாக தங்கள் கார்ப்பரேட் நண்பர்களின் கஜானாவை நிரப்புவதை இலக்காக கொண்டேயிருக்கிறது. எனவே இவர்கள் ஒரு போதும் எளியவர்களுக்கான இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யப் போவதில்லை. மன்னராலும், மந்திரிகளாலும் மக்களுக்கு எந்தவொரு பலனுமில்லை. மன்னரும் அவரது 78 மந்திரிகளும் மற்றும் அவர்களது கார்ப்பரேட் நண்பர்கள் ஆகியோர் ஒரு இந்தியாவிலும், 139 கோடி மக்கள் இன்னொரு இந்தியாவிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு இந்தியாவிற்குமான பூகோள எல்லை ஒன்றே என்றாலும் கொள்கைகளும், வாழ்நிலையும் முரண்பட்ட இரு திசைகளிலேயே தொடர்கின்றன.

கட்டுரையாளர் : ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஎம் 

;