articles

img

மோடி ஆட்சியில் வஞ்சிக்கப்படும் மாநிலங்கள் - அ.அன்வர் உசேன்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்று கூட்டாட்சி தத்துவம். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று ஒன்றிய மாநில அரசாங்கங்களிடையே நிதி பகிர்வு. மோடி அரசாங்கத்தின் தறிகெட்ட நெறியற்ற மையப்படுத்துதல் நடவடிக்கைகளில் ஒன்று மாநிலங்களின் நிதி ஆதாரங்களை பறிப்பது ஆகும். இந்த வஞ்சக செயல்களினூடே சில மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை செய்யப்படுகிறது எனும் குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் பாதிக்கப் படுவது தமிழ்நாடு/கேரளா போன்ற தென் மாநிலங் கள் ஆகும். இது மறுக்க முடியாத உண்மை என்பது ஜாஸ்மின் நிஹலானி எனும் பத்திரிகையாளர் தொகுத்து வெளியிட்டுள்ள தரவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கின்றன.

சில மாநிலங்களுக்கு  ஓர வஞ்சனை

ஒன்றிய அரசுக்கு தாம் தரும் வரிகளில் ஒவ்வொரு ரூபாய்க்கும் திரும்ப ஒன்றிய அரசின் நிதித் தொகுப்பி லிருந்து மாநிலங்கள் எவ்வளவு பெறுகின்றன? 2021-22 ஆண்டுக்கான விவரங்கள் கீழே:

ஒரு ரூபாய்க்கும் கீழே பெறும் மாநிலங்கள்:

மாநிலம்          பெறும் தொகை

மகாராஷ்டிரா            0.08
கர்நாடகா                   0.15
ஹரியானா                 0.18
குஜராத்                        0.28
தமிழ்நாடு                   0.29
தெலுங்கானா            0.43
ஆந்திரா                      0.49
கேரளா                        0.57
பஞ்சாப்                       0.69
மேற்கு வங்கம்          0.87

ஒரு ரூபாய்க்கும் அதிகமாக பெறும் மாநிலங்கள்:

உத்தரகண்ட்                1.29
ராஜஸ்தான்                  1.33
ஒடிசா                             1.35
இமாச்சல் பிரதேசம்   1.46
சத்தீஸ்கர்                      1.96
ஜார்க்கண்ட்                  2.15
மத்தியப் பிரதேசம்    2.42
அசாம்                             2.63
உத்தரப் பிரதேசம்     2.73
பீகார்                             7.06

தாங்கள் தரும் வரியாதாரங்களை ஒப்பிடும் பொழுது மத்திய நிதி தொகுப்பிலிருந்து பெறும் ஒதுக்கீடு மகாராஷ்டிரா/குஜராத் உட்பட தென் மாநிலங்களுக்கு குறைவாகவும் வட மாநிலங்கள் பெறுவது அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்சனை விவாதப்பொருளாக தொடர்ந்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதனை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த ஒதுக்கீடுகளுக்கு  என்ன அடிப்படை?

  •  மாநிலத்தின் மக்கள் தொகை/பரப்பளவு/வனங்கள்/சுற்றுச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் தேவைகள்- 40%
  •  தனி நபர் சராசரி வருமான வேறுபாடுகள்- 45%
  •  மக்கள் தொகை கட்டுப்பாடு/சமூக குறியீடுகளில் முன்னேற்றம்- 15%

சமூக குறியீடுகளில் முன்னேற்றம் கண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் குறைவா கவும் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் அதிகமாகவும் பெற இந்த அடிப்படைகள் வழி வகுக்கின்றன. அனைத்து மாநிலங்களும் முன்னேற வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க இயலாது. ஆனால் ஏன் தொடர்ந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்தும் விடுதலைக்கு 75 ஆண்டுகளுக்கு பின்னரும் சில மாநிலங்கள் முன்னே றாமல் உள்ளன என்பதுதான் கேள்வி. நிதி ஒதுக்கீடு குறைவாக பெறும் மாநிலங்கள் கூடுதல் முன்னேற் றம் காண்பதும் நிதி அதிகமாக பெறும் மாநிலங்கள் குறைவான முன்னேற்றம் அடைவதுமாகிய இந்த முரண்பாடு எவ்வளவு நாட்களுக்கு தொடரப் போகிறது?

தமிழ்நாடு/ கேரளாவின் இழப்பு

ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே எவ்வாறு வரிவருவாயை பகிர்வது என்பதை முடிவு செய்ய நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. 1995-2000 காலத்துக்கான 10வது நிதி ஆணையம் கேரளாவுக்கு 3.87% ஒதுக்கீடு செய்தது. ஆனால் 2020-25 ஆண்டுக்கான 15வது நிதி  ஆணையம் இதனை 1.92% ஆக குறைத்துவிட்டது. இதன் விளைவாக கேரளா அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.18,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என நிதி அமைச்சர் பால கோபால் அவர்கள் வேதனைப்படு கிறார். இதே போல ஜி.எஸ்.டி காரணமாக கேரளா வுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் மதிப்பி டப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு ரூ.33,000 கோடி இழப்பு ஏற்பட்டால் ஒரு மாநில அரசாங்கம் எப்படி நிர்வாகம் நடத்த முடியும்? கடன் எப்படி தவிர்க்க முடியும்? இதே நிலைதான் தமிழ்நாடு அரசாங்கத்துக்கும் உள்ளது. 10வது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு 6.64% ஒதுக்கியது. ஆனால் 15வது நிதி ஆணையம் இதனை 4.08% ஆக குறைத்துவிட்டது. அதே சமயத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு 17.81%லிருந்து 17.94%ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு முன்னேறிய மாநிலங்கள் பெறும் நிதி ஒதுக்கீடு குறைவது என்பது இந்த மாநிலங்க ளின் முன்னேற்றத்துக்கு உதவாது. அதன் விளை வாக இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்துக்கும் உதவாது.

மத்திய நிதி தொகுப்பில் கூடுதல் பங்கு பெறும் உத்தரப் பிரதேசம்/பீகார் ஆகிய மாநிலங்கள் தனி நபர் சராசரி மொத்த உற்பத்தி ரூ.60,000க்கும்குறைவாகவே சாதித்துள்ளன. ஆனால் நிதி ஒதுக்கீடு குறைவாக பெறும் கேரளா/தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ரூ. 2,00,000 க்கும் அதிகமாக தனி நபர் சராசரி உற்பத்தி செய்து சாதித்து உள்ளன. இந்த பாரபட்சமும் ஓர வஞ்சனையும் முடிவு பெற வேண்டும் என்பதே கேரளா/ தமிழ்நாடு போன்ற மாநில மக்களின் கோரிக்கை யாக இருக்க இயலும்.

இந்து ராஷ்ட்ராவும்  அதிகார குவிப்பும்

நாடு விடுதலை பெற்ற பொழுது இராணுவம்/தகவல் தொடர்பு/ வெளியுறவு கொள்கை / நாணயம் வெளியிடுதல் ஆகியவை தவிர மற்ற அனைத்து அதி காரங்களும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலுவான குரல் எழுந்தது. இன்னும் சொல்லப்போனால் விடுதலைக்கு முன்பு காங்கிரஸ்  இயக்கமும் இத்தகைய கோரிக்கையை முன் வைத்தது. ஆனால் விடுதலைக்கு பின்பு மாநிலங்க ளின் அதிகாரம் குறைவாக தரப்பட்டது மட்டுமல்ல; நாளடைவில் அவை மிகவும் சுருக்கப்பட்டுவிட்டன. எனவேதான் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் எனும் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. பா.ஜ.க.வின் ஆட்சியில் அனைத்தும் ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்த்தப்படுகின்றன. மொழி/பண்பாடு ஆகியவை மட்டுமல்ல; மாநிலங்க ளின் நிதி அதிகாரங்களும் பெருமளவு வெட்டப்படு கின்றன. இந்து ராஷ்ட்ரா அமைப்பதற்கு அதீதமான மையப்படுத்தப்பட்ட ஒரு அரசுமுறை இருப்பது அவசியம் என ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இதன் ஒரு பகுதியாகவே மாநிலங்களின் நிதி ஆதாரங்களை தன் கைகளில் பறிக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இது தடுக்கப்படாவிட்டால் மாநிலங்கள் மக்கள் நலத்  திட்டங்களை நிறைவேற்ற இயலாது. அவ்வாறு நிறைவேற்ற முனைந்தால் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். மாநிலங்களை கடனாளி ஆக்குவதும் அதனை முன்வைத்து பா.ஜ.க. அரசியல் லாபம் தேட முனைவதும் கண்கூடாக தெரிகிறது. தன்னை சார்ந்திராத மாற்று கட்சிகளின் அரசாங்கங்க ளை சிதைப்பது என்பது இந்த திட்டத்தின் அடிப்படை அம்சம் ஆகும். 

ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வின் இந்த கபட நாட கத்தை மக்கள் சக்தி மூலம்தான் முறியடிக்க முடியும். பாதிக்கப்படும் குஜராத் போன்ற மாநிலங்கள் மோடி அரசை கேள்வி கேட்க மாட்டார்கள். அதற்கு காரணம் சித்தாந்த ஒற்றுமை மட்டுமல்ல; மோடியை கேள்வி கேட்கும் தைரியம் இன்று பா.ஜ.க.விலேயே எவருக்கும் இல்லை என்பதே உண்மை. எனவே தான் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து மக்களை திரட்டி இயக்கங்களை நடத்து கிறது. இந்த இயக்கங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளையும் கேரளாவுக்கு எதிரான நிலைப்பாடுகளையும் மக்களுக்கு உணர்த்த முயற்சி கள் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் கேரளா மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் அவர்கள் தலைமையில் நடந்த “மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பு இயக்கம்”  மாபெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.  ஒட்டு மொத்தமாக மாநிலங்களுக்கு ஒதுக்கப் படும் நிதி பகிர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அதே சம யத்தில் தமிழ்நாடு/கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் ஓரவஞ்சனை தடுக்கப்பட வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் என்பது காலத்தின் கட்டாயம்.
 




 

;