articles

img

பழங்குடியினரைச் சூறையாடியுள்ள பட்ஜெட்

புதுதில்லி, பிப்.2- பழங்குடியின மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களைச் சூறையாடியுள்ள பட்ஜெட் என்று அகில இந்திய ஆதிவாசிகள் உரிமைக ளுக்கான அமைப்பு (ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச்) தெரி வித்துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் தலைவர் எம்.பாபுராவ் மற்றும் தேசிய அமைப்பாளர்  ஜிதேந்திர சௌத்ரி கூறியிருப்பதாவது: ஒன்றிய பட்ஜெட், பழங்குடியினரைப் பொறுத்தவரை அமிர்தம் அல்ல, மாறாக அவர்களைச் சூறையாடியுள்ள பட்ஜெட். பழங்குடியி னரின் மக்கள்தொகையான 8.6  விழுக்காட்டிற்கு ஏற்ப, பழங்குடியினர் சிறப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடுகள் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் அப்படி இல்லை. மாறாக வெறும் 2.7 விழுக்காடு அளவிற்கே இருக்கிறது. இதில் மேலும் கொடுமையான அம்சம் என்னவென்றால் இவ்வாறு பழங்குடியினருக்காக ஒதுக்கப்படுவதாக அரசுத்தரப்பில் கூறப்பட்டாலும், இந்தத்தொகை பொதுத்திட்டங்களுக்கே திருப்பி விடப்படுகிறது.

மோசடியான முறையில்

உதாரணமாக, சாலைப் போக்குவரத்துக்காக செலவிடப்படும் தொகை கூட பழங்குடியினர் நலத்திற்காக செலவிடப்படுவதாக அறிவிக்கப் படும் கொடுமையும் இந்த பட்ஜெட்டில் நிகழ்ந்திருக்கிறது. சாலைகள், பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் வழியாகப் போடப்படுவதால் இது பழங்குடியினர் நலத்திற்கானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாலைப் போக்குவரத்துக்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டி ருக்கிறது. இதில் பழங்குடியினர் நலத்திற்கு என்று எதுவுமே கிடை யாது. ஆனாலும் இதனை ‘பழங்குடியினர் நலத்தின்கீழ்’ என்று மோசடி யான முறையில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோன்றே பழங்குடியினருக்கான உயர் கல்விக்கான ஒதுக்கீடு மாகும். ஆந்திரப்பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் உள்ள பழங்குடி யினர் பல்கலைக் கழகங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டி ருக்கக்கூடிய அதே சமயத்தில், ஐஐடி-களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையோ 270 கோடி ரூபாயாகும். ஐஐடி-களில் ஒரு விழுக்காடு அளவிற்குக் கூட பழங்குடியின மாணவர்கள் படிக்கவில்லை.   இதே போன்று எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இவ்வாறு பழங்குடியினர் நலனுக்கு என்று ஒதுக்கப்படும் தொகை மோசடியாக இதர திட்டங்களுக்குத் துஷ்பிரயோகம் செய்யப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இதேபோன்றே மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான ஒதுக்கீடு 33 விழுக்காடு வெட்டப் பட்டிருப்பது, பழங்குடியினரையும் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக பழங்குடியினப் பெண்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

இதேபோன்றே உணவு மானியத் தொகைகளை 31 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்தின்றி வறிய நிலையில் வாழும் பிரிவினரில் பழங்குடியினர் கணிசமானவர்கள் என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் இவ்வாறு வெட்டினை ஏற்படுத்தியிருப்பது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இவ்வாறு பட்ஜெட்டில் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு போதுமான தல்ல என்பதுடன் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகைகளும் இதர திட்டங்களுக்குத் துஷ்பிரயோகம் செய்யப்படும் என்பதை அறியும்போது இது பழங்குடியினர் மீதான மோசடி என்றே கூற வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் இவ்வாறு பழங்குடியினர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் மறுபக்கத்தில் பணக்காரர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இந்த பட்ஜெட் மூலமாக நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அசிங்கமான முறையில் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது. பணக்காரர்களின் நலன்களைப் பாதுகாத்திடும் அதே சமயத்தில் ஏழைகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பட்ஜெட்டுக்கு எதிராகக் கண்டனக் கணைகள் எழுப்பு மாறு அனைத்துக் கிளைகளையும் ஆதிவாசிகள் அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு எம்.பாபுராவும், ஜிதேந்திர சௌத்ரியும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். (ந.நி.)
 

;